நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு ‘நீட்’ தேர்வெழுதியவர்களில் 1,500க்கும் அதிகமான தேர்வர்களுக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, ‘நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டு, அந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, பீகார் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தரப்பில் தாக்கல் செய்த பதிலில், ‘தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும். நேரக் குறைபாடால் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அந்த மறுதேர்வு முடிவுகள் 30ம் தேதிக்குள் வெளியிடப்படும்’ என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறுதேர்வுக்கான அறிவிப்பாணையை இன்றே வெளியிட உத்தரவிட்டனர். மேலும், ஜூலையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் ஜூன் 30க்குள் முடிவுகளை வெளியிடுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது 24 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதம் வைத்தார். கோட்டாவில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதையும் மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதனை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவையற்ற உணர்ச்சிகரமான வாதங்கள் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை அடுத்த இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கினை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

The post நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: