இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21க்கு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு

சென்னை: ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டும். முதலில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு. இது அடிப்படையான தேர்வு. தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் தாள் ஒன்று, தாள் இரண்டு என நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெற்று விட்டால் அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும். அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இதை அடிப்படை தகுதியாக வைத்துக்கொண்டு அடுத்த போட்டி தேர்வில் தேர்வாக வேண்டும். இதில் கட் ஆப் அடிப்படையில் தேர்ச்சி பெற்றால் வேலை பெறலாம். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை எத்தனை காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவோ அதற்கேற்ப ஆட்களை தேர்வு செய்யும். அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான எஸ்ஜிடி எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் நேர்காணல் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். இதற்காக பலரும் ஆர்வத்துடன் தயாராகி வந்தனர். இதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளன. 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதனால் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் முடங்கின.

கடந்த 6ம் தேதி தான் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டன. தற்போது பள்ளிக் கல்வித்துறை முழு வீச்சில் செயல்பட தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிர்வாக காரணங்களுக்காக ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு மீண்டும் ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21க்கு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: