பாஜ கூட்டணி ஆட்சி தொடங்கியது 71 ஒன்றிய அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்: 100 நாள் செயல்திட்டம் அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் பதவி ஏற்ற 71 ஒன்றிய அமைச்சர்களும் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன் மூலம் பாஜ கூட்டணி ஆட்சி தொடங்கியது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் 72 ஒன்றிய அமைச்சர்கள் கடந்த 9ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்களின் இலாகா நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இலாகா அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்கள் 71 பேரும் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். பாஜவைச் சேர்ந்த 60 எம்பிக்களும் பொறுப்பேற்றதும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷா, நாட்டின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும், தீவிரவாதம், கிளர்ச்சி மற்றும் நக்சலிசத்திற்கு எதிரான அரணாக இந்தியாவை உருவாக்குவதாகவும் சூளுரைத்தார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பொறுப்பேற்றதும், பாரதம், வசுதேவ குடும்பகம் ஆகியவை வெளியுறவுக் கொள்கையின் இரு கோட்பாடுகளாக இருக்கும் என்றும், சீன எல்லையில் நிலவும் எஞ்சிய பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். பிரதமர் மோடியின் வளர்ச்சி அடைந்த இந்தியா கனவை நிறைவேற்ற பாடுபடுவேன் என புதிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறினார்.
இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பல்வேறு உறுதிமொழிகளை அளித்தனர். மேலும், ஆட்சியின் முதல் 100 நாளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள், பணிகள் குறித்த தகவல்களையும் பல்வேறு அமைச்சகங்கள் வெளியிட்டன. பிரதமரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் புதிய பாஜ கூட்டணி அரசு செயல்படத் தொடங்கி இருக்கிறது.

* மோடிக்கு அமைச்சர் முருகன் நன்றி
தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் ஒன்றிய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்று டெல்லி சாஸ்திரி பவனில் இருக்கும் அதன் அலுவலகத்தில் அவர் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதில், ‘‘இரண்டாவது முறையாக மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், கொள்கைகள் போன்றவற்றை நாட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் கொண்டு செல்வதில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். அதில் நானும் ஒரு அங்கம் வகிப்பதில் பெருமை அடைகிறேன். நாட்டிலுள்ள பொதுமக்களுக்காக மூன்று கோடி வீடுகள் கட்ட அமைச்சரவையில் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஏழைகளின் வளர்ச்சியில், வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி முன்னேறி இந்தியாவை அமைப்பதில் ஒன்றிய அரசு உறுதி கொண்டிருப்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ கூட்டணி ஆட்சி தொடங்கியது 71 ஒன்றிய அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்: 100 நாள் செயல்திட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: