காவேரிப்பாக்கம் அருகே பிரம்மதேவருக்கு அருளிய பரமபத நாதர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரி எனும் ஊரில் அமைந்துள்ளது கோதண்டராம சுவாமி கோயில். இங்கு தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோதண்டராமசுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டாலும் இங்கு பிரதானமூர்த்தியாக பரமபதநாதரே, தேவி, பூதேவி சமேதராக ஆதிசேஷன் மடியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலதுபுறம் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் பத்மாசனத்தில் தனது திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி எழில்கோலத்துடன் தனிசன்னதி அருளாசி வழங்கி வருகிறார். இடதுபுறம், ஆஸ்தான பெருமாளான ராமபிரான், சீதாதேவியுடனும், இலக்குவன் மற்றும் ஆஞ்சநேயருடனும் நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்றும் விஸ்வக்க்ஷேனர், உடையவர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் மூல விக்ரகங்களாக எழுந்தருளியுள்ளனர். உற்சவமூர்த்திகள் வைகுந்தநாதர், தேவி, பூதேவி சமேதராக நின்றதிருக்கோலத்திலும் மற்றும் கனகவல்லித்தாயார், சீதாதேவி சமேத ராம, லக்ஷ்மண், ஆஞ்சநேய விக்ரகங்களும், சுதர்ஸன-நரசிம்மர், கோபாலகிருஷ்ணன், லஷ்மிஹயக்ரீவர், செல்வர் ஆகிய விக்ரகங்களும் உள்ளன.

பரமபதநாதனை அஷ்டாக்ஷர மந்திரமூர்த்தி என பெரியோர்கள் பூஜித்து வருகின்றனர். இப்பெருமானின் கருவறைமுன்அமர்ந்து, அஷ்டாக்ஷர மகாமந்திரமாகிய ஓம்நமோநாராயணாய என்னும் திவ்ய மந்திரத்தை எவர் ஒருவர். ஒருமண்டலம் வரை தினந்தோறும் 108அல்லது 1008 தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருகிறார்களோ, அவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் ஏற்படும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பெரும்பாலான வைணவக்கோயில்களில், பெரிய திருவடி என்றழைக்கப்படும் கருடாழ்வார், பெருமாளை நோக்கி கையை கூப்பிக்கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பார். இத்தலத்தில், கருடாழ்வார், பெருமாளுக்கு நேர் எதிரே, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை குத்துக் காலிட்டுக்கொண்டும், பெருமாளை தன் தோளில் ஏற்றிக்கொண்டு, அவரை நினைக்கும் பக்தர் இடம்நோக்கி செல்லத் தயாரான நிலையில் வீற்றிருக்கின்றார்.கோயிலுக்கு வெளியே, சிறியதிருவடி என்றழைக்கப்படும் ஆஞ்சநேயர் இடையில் ஒரு சிறிய குத்துவாளுடன், நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் ஒருவர பிரசாதி. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆஞ்சநேயருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் வரை தீவிர விரதம் அனுஷ்டித்து, தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

தல வரலாறு:

அனைத்து ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்யும் பிரம்மதேவருக்கு நான்கு திருமுகங்கள், ருக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளையும் நோக்கி சதாஸ்மரணம் செய்து கொண்டிருப்பதற்காகவே நான்கு முகங்களை ஏற்றதால், பிரம்மனுக்கு திசைமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சதாவேதங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதால், அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் சக்தியைப் பெற்றார் பிரம்மதேவன். ஒருசமயம், பிரம்மதேவருக்கு வேதங்களின் பொருள்பற்றி ஐயம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, தனது படைப்புத் தொழிலை நிறுத்தி வைத்து, பகவான் மன்நாராயணனை நினைத்து மிகக்கடுமையான தவத்தினை மேற்கொண்டார் பிரம்மா. பிரம்மதேவரின் மிகக்கடுமையான தவத்தினால் திருவுள்ளம் உகந்த மன்நாராயணன், பரமபதம் என்னும் தனது திவ்ய உலகில் எழுந்தருளியுள்ளபடி பிரம்மனுக்குக் காட்சியளித்து, வேத ரகசியங்களை உபதேசித்தருளினார்.

பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி, அந்த திவ்ய தரிசனத்தை எக்காலத்திலும் பக்தர்கள் அனைவரும் தரிசித்து, அதன் பலனாகப் பாவங்க நீங்கி நல்வாழ்வு பெறவேண்டி, அதே பரமபத திருக்கோலத்தில் மன்நாராயணனும் திசைமுகன் சேரியில் எழுந்தருளிவிட்டார். ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108வைணவ திவ்யதேசங்களில், 106 திவ்யதேசங்கள்தான் பக்தர்களால் தரிசிக்கக்கூடியவை. 107 மற்றும் 108வது திவ்யதேசங்களாக கூறப்படுவது, திருப்பாற்கடலும், பரமபதமும் ஆகும். இந்த இருதிருத்தலங்களுமே ராணிப்பேட்டை மாவட்டத்தில், காவேரிப்பாக்கம் அருகே அமைந்திருப்பது பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கரிய பேறுகளாகும். காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் அற்புதப்பதியில் பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி தருகிறார்.

பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனே இத்திருக்கோயிலில் சேவை சாதிப்பதால், இங்கு பரமபதவாசல் என்று ஒரு தனிவாசல் கிடையாது. பிரதான வாசல் வழியே தான் வைகுண்ட ஏகாதசி அன்றும், மற்ற எல்லா விசேஷ நாட்களிலும் வைகுந்தநாதர் புறப்பாடு கண்டருளுகின்றார் என்பது சிறப்பு. அனைத்து விதமான வேண்டுதல்களும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் வரை தீவிர விரதம் அனுஷ்டித்து, தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

 

The post காவேரிப்பாக்கம் அருகே பிரம்மதேவருக்கு அருளிய பரமபத நாதர் appeared first on Dinakaran.

Related Stories: