×

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வருவாய் ரூ.2753 கோடியாக அதிகரிப்பு


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக் கழகமாகும். தொழில் தொடங்குவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும் ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்காகவும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது. இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடைய ஆர்.கே.சண்முகம் இந்த முதலீட்டு கழகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மொத்த நிதியில் 40 சதவீதம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 19 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வரும் இந்த கழகம் இதுவரை 1.27 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையை பொறுத்தவரை வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளர்ச்சி நிறுவனம், செய்தித்தாள் காகித நிறுவனம், சிமென்ட்ஸ் நிறுவனம், உப்பு நிறுவனம் என செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறது. மேலும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கும் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு நிலம் வாங்க, தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கி பொருத்துவதற்கும், தொழிலுக்கு தேவையான நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் உண்டான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.

இதுதவிர, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளிகள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதனிடையே இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழகத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கொண்ட மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் கொரோனாவிற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி ஹன்ஸ் ராஜ் வர்மா பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 2021 மே மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 4 நிதியாண்டு காலத்தில் ரூ.2753 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் கூறியதாவது: சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் முதலீட்டுக்காக வங்கிகளிலிருந்து கடன் வாக்குவதற்கு தமிழ்நாடு முதலீட்டு கழகம் உறுதுணையாக இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி 2021ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை 23 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் முதன்மை நிர்வாக இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது முக்கிய காரணமாக உள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் கோவை மற்றும் திருச்சி ஆகிய 2 இடங்களில் கலந்துரையாடல்கள் (கான்க்லேவ்) நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டதால் புதுபுது தொழில்கள் தொடங்குதற்கு ஊக்குவிக்கப்பட்டது. மேலும் டிக் வருவாய் உயர்த்துவதற்காக டிக் 1.0 அதனை தொடர்ந்து டிக் 2.0 தொடங்கப்பட்டது. 2020ல் டிக் 1.0ல் நிர்வாக கடன் தொகை ரூ.1072 கோடியாக இருந்தது.

அதனை தொடர்ந்து 2023ல் டிக் 2.0ல் நிர்வாக கடன் தொகை ரூ.2525 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தொழில் நுட்பத்தை கருத்தில் கொண்டு ெதாழிற்சாலை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல 2.0 என்ற கட்டமைப்பை நிறுவியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர பயிற்சி மையங்களுக்கு இதன் அவசியம் குறித்து வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வினையூக்கியாக டிக் பங்காற்றும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வருவாய் ரூ.2753 கோடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Industry Investment Corporation ,Tamil Nadu Industrial Investment Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...