பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது: ஜூன் 1ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு

புதுடெல்லி: வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் நேற்று ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 18வது மக்களவைக்கு கடந்த ஏப். 19ம் தேதி தொடங்கி 6 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 543 ெதாகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு மட்டும் 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. பீகாரில் 8 இடங்கள், சண்டிகரில் 1 , இமாச்சல பிரதேசத்தில் 4 , ஜார்கண்ட்டில் 3 , ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9 இடங்கள் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 57 எம்பி பதவிகளுக்கும் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் முக்கிய விஜபி வேட்பாளரான பிரதமர் மோடி 3வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.

அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் நடிகர் ரவி கிஷன் (பாஜ), மிர்சாபூரில் அப்னா தளம் கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அனுப்ரியா படேல், சண்டவுலியில் ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே (பாஜ), பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பாஜ), பாடலிபுத்ராவில் லாலு மகளான மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல் பிரதேசம் காங்க்ராவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), மண்டியில் நடிகை கங்கனா ரணாவத் (பாஜக), அவரை எதிர்த்து மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் (காங்கிரஸ்), ஹமிர்பூரில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் (பாஜ),பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இலங்கை, அமெரிக்காவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரண்ஜித் சிங் சந்து (பாஜ), ஜலந்தரில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்), பத்திண்டாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி), பாட்டியாலாவில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் (பாஜ), மேற்குவங்க மாநிலம் டயமண்ட் ஹார்பரில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல்), ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மருமகள் சீதா சோரன் (பாஜ), சண்டிகரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணீஷ் திவாரி (காங்கிரஸ்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடைசி கட்ட தேர்தல் நடக்கும் 57 மக்களவை தொகுதியுடன், ஒடிசாவில் உள்ள 41 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு நாளை பிரசாரம் ஓய்வதால், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

 

The post பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது: ஜூன் 1ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: