×

உச்ச நீதிமன்ற வழக்குக்கு பின்னர் 5 கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கை மற்றும் அதன் சதவீதங்களை 48 மணி நேரத்தில் விரைவாக வெளியிடக்கோரியும், வாக்கு சதவீதங்களில் 6சதவீதம் வித்தியாசம் இருப்பதாகவும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு மற்றும் மஹூவா மொய்த்ரா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் படிவம் 17சி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா?. வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதங்களை ஏன் விரைவாக வெளியிடவில்லை? மேலும் 6சதவீதம் வாக்கு வித்தியாசம் எதனால் ஏற்பட்டது’’ என்று கேள்வியெழுப்பி இருந்தது. அதற்கு விளக்கமளித்திருந்த தேர்தல் ஆணையம் படிவம் 17சியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என்பது தீமைக்கு மட்டுமில்லாமல், தவறான செயல்பாடுக்களுக்கு கண்டிப்பாக வழிவகுக்கும். அதனால் அது சாத்தியமில்லை.

மேலும் மனுதாரர் கூறுவது போன்று வாக்கு வித்தியாசம் எதுவும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்திருந்தது.இந்த வழக்கை நேற்று முன்தினம் மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஸ் சந்திர சர்மா, ஐந்து கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டதால் இந்த விவகாரத்தில் இடைக்காலமாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த ஐந்து கட்ட மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பதிவான சதவீதங்கள் ஆகியவை குறித்த முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், அதில் வாக்களித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது ஆகிய புள்ளிவிவரங்களை தொகுதி வாரியாக வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழ்நாட்டை பொருத்தவரை முதலாவதாக தர்மபுரியில் 81.20 சதவீதமும், இரண்டாவதாக கள்ளக்குறிச்சி 79.21 சதவீதமும், மூன்றாவதாக 78.70 சதவீதம் கரூர் தொகுதியும் வாக்குகளை பெற்றுள்ளது. இதே போன்று சென்னை, ஆரணி , அரக்கோணம், சிதம்பரம் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான வாக்கு சதவீத விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே போன்று புதுவையை பொருத்தவரை 78.90 சதவீதம் மொத்த வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்ற வழக்குக்கு பின்னர் 5 கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,New Delhi ,Association for Democratic Reforms ,ATR ,Mahuwa Moitra ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு:...