×

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்கள் மறுநடவு செய்து மீண்டும் துளிர்க்க வைப்பு: 1:10 என்ற விகிதத்தில் 7,580 மரங்கள் நடவு, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தகவல்


கிழக்கு கடற்கரை சாலை சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரியுடன் இணைக்கும் மிக முக்கியமான சாலை. கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. நீளத்திற்கு ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த நில எடுப்பு பணிக்காக 2005ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 இடங்களில் நில எடுப்பு பணி நடந்து வருகிறது.

மேலும் இந்த பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலாங்கரை முதல் அக்கரை வரையில் ஆறு வழித்தடமாக சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளுக்கு இடையூறாக இருந்த வளரும் தன்மையுடைய மரங்களை பாதுகாப்பாக வேறு இடத்தில் மறுநடவு செய்வதற்கும், மற்ற மரங்களை வெட்டி அகற்ற சென்னை மாவட்ட பசுமைக் குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்டது.

மாவட்ட பசுமைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு மரங்களை மறுநடவு செய்தனர். அவ்வாறு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 12ல் நடைபெற்ற மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் 97 மரங்களை மறுநடவு செய்வதற்கும், இடையூறாக உள்ள 758 மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்கு ஈடாக 1:10 என்ற விகிதத்தில் 7,580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள பகுதியில் 758 மரங்களை அகற்றுவதற்கு ஏலம் விடப்பட்டு அவை அகற்றப்பட்டு வருகிறது. இங்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 7,580 புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு தேவைப்படும் ரூ.3.26 கோடியை வனத்துறைக்கு செலுத்துமாறு சென்னை மாவட்ட வன அலுவலரிடம் இருந்து கோரிக்கை வந்தது.

இதையடுத்து, மாவட்ட வனத்துறைக்கு இடைக்கால தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட பசுமைக் குழுவின் உத்தரவுக்கு ஏற்ப நீலாங்கரை முதல் அக்கரை வரை உள்ள 97 மரங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ராமன்தாங்கல் ஏரிக்கரையில் மறுநடவு செய்யப்பட்டு வருகிறது.

மறுநடவுப் பணிகளை இந்திய அளவில் மறுநடவு செய்வதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற கோவையை சேர்ந்த ‘கிரீன் கேர்’ சையத் என்பவர் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மறுநடவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த 97 மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு. தாய் மண்ணுடன் சேர்த்து தேவைப்படும் உரங்களை இட்டு மறுநடவு செய்யப்பட்டது.

அவ்வாறு மறுநடவு செய்யப்பட்ட மரங்களுக்கு தினமும் தேவையான அளவு நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள தவிர்க்க முடியாத மரங்களை மட்டுமே பசுமைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் அகற்றப்படுகிறது. ராமன் தாங்கலில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் நன்றாக வளரத் தொடங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

* 97 மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு தாய் மண்ணுடன் சேர்த்து தேவைப்படும் உரங்களை இட்டு மறுநடவு செய்யப்பட்டுள்ளது.

* 1:10 என்ற விகிதத்தில் 758 வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 7,580 புதிய மரக்கன்றுகள் நடவு.

* அகற்றப்பட்ட மரங்கள் ராமன் தாங்கலில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் நன்றாக வளரத்தொடங்கியுள்ளது.

* சிறப்பு நிபுணத்துவம் பெற்ற கோவையை சேர்ந்த ‘கிரீன் கேர்’ சையத் என்பவர் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மறுநடவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

* பறவைகள், பட்டாம்பூச்சிகள் வரத்து
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த 97 மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு, தாய் மண்ணுடன் சேர்த்து, தேவைப்படும் உரங்களையிட்டு மறுநடவு செய்யப்பட்டுள்ளன. இப்படி மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் தினமும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது. சாலை விரிவாக்கத்திற்கு இடையூறான மற்றும் தவிர்க்க முடியாத மரங்கள் மட்டுமே பசுமைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் அகற்றப்படுகிறது.

ராமன்தாங்கலில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் நல்ல முறையில் வளர தொடங்கி இருக்கின்றன. இதனால் இங்கு பலவிதமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வந்து செல்கின்றன. மேலும் இப்பகுதி இயற்கை சூழ்ந்த பகுதியாக உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்கள் மறுநடவு செய்து மீண்டும் துளிர்க்க வைப்பு: 1:10 என்ற விகிதத்தில் 7,580 மரங்கள் நடவு, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Chennai ,Mamallapuram ,Puducherry ,Nagapattinam ,Kanyakumari ,Thiruvanmiur ,Acre ,
× RELATED அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு உயர்வு