கால் ஆணி குணமாக எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும். அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கு வருகிறது. காலில் ஆணி வந்துவிட்டால் பாதத்தை தரையில் வைக்க இயலா வண்ணம் வலியை ஏற்படுத்தும்.அளவு குறைந்த காலணிகள் அணிவது உட்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு வலியைத் தருகிறது. பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல் உண்டாவதைத்தான் கால் ஆணி என்கிறோம். கால் ஆணி உடையவர்களின் காலணிகளை அணிவதன் மூலமும் கால் ஆணி பரவ வாய்ப்புள்ளது. காலுக்கு பொருந்தாத செருப்புகளை பயன்படுத்துவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி வரும்.

தோல் தடித்து வலி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை கால் ஆணி உள்ள இடங்களில் தடவி வர வேண்டும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி, காலில் வைத்து துணியால் கட்டு போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒருவாரம் செய்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.மல்லிகை செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடலாம். இதனால் கால் ஆணி மேலும் பரவாமலும் இருந்த இடம் தெரியாமலும் போகும்.

அம்மான் பச்சரிசி செடியை எடுத்து அதில் வரும் பாலை பூசிவர கால்ஆணி மறையும். சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து தூங்குவதற்கு முன் கால் ஆணி மீது பூசிவர விரைவில் குணம் கிடைக்கும். சிலருக்கு கால் ஆணியால் புண் வரலாம். அதற்கு விளக்கெண்ணெயில்
மஞ்சள்தூள் கலந்து அதை தடவ புண் குணமாகும். கால் ஆணியும் வராது.

5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர்விட்டு அரைத்து கால்ஆணி உள்ள இடத்தில் கனமாக வைத்து தடவி வர நல்ல நிவாரணம் தெரியும். வெற்றிலையை அரைத்து கால் ஆணி மீது வைத்துக் கட்டி வர ஆணி மறையும்.நவீன மருத்துவத்தில் கால் ஆணிக்கென பல சிகிச்சைகள் வந்துவிட்டன. எளிய வைத்தியமாக மேற்சொன்னவை பலனளிக்காதபோது, லேசர் சிகிச்சையுடன் கூடிய நவீன முறையில் கால் ஆணிக்கு நிரந்தர தீர்வு பெறலாம்.

தொகுப்பு: சுப்ரமணியன்

 

The post கால் ஆணி குணமாக எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: