கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட எனக்கு, 11 மாதங்கள் ஆகியும் வயிறு குறையவில்லை. அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.
– சி.எஸ்.ராஜகுமாரி, திண்டுக்கல்

பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், சிகிச்சைக்குப் பிறகு ஆறு வாரங்கள் முதல் மூன்று மாதங்களுக்குள், தசைகளுக்கான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உடற்பயிற்சி இல்லாததுதான் வயிற்றுத்தசை பெருக்கக் காரணம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் அவர்களின் வயிறு பழையநிலைக்குத் திரும்பும்.`பெல்விக் பிரிட்ஜிங்’ (Pelvic Bridging): மல்லாக்கப் படுத்துக்கொண்டு, கால்களை மடக்கி, மூட்டுகளைச் செங்குத்தாக வைத்துக்கொள்ளவும். இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு இடுப்புப் பகுதியை மட்டும் மெதுவாக மேலே உயர்த்தவும். சில விநாடிகள் கழித்து, பழைய நிலைக்கு வரவும்.

வயிற்றுத் தசைகளுக்கான பயிற்சிகள் (Abdominal Crunches): மல்லாக்கப் படுத்துக்கொண்டு, கால்களைச் செங்குத்தாக மடக்கவும். இரு கைகளையும் மேல் நோக்கி நீட்டியபடி, தலை மற்றும் மார்புப் பகுதியை மட்டும் தரையிலிருந்து சில இன்ச் மேலே உயர்த்தவும். சில விநாடிகள் கழித்து, பழையநிலைக்கு வரவும்.ப்ளாங்க் (Plank): குப்புறப் படுத்துக்கொண்டு, முழங்கையை மடித்து ஊன்றி, கால் விரல்கள் மட்டும் தரையில் படுமாறு வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில், உடல் நேர்கோட்டில் இருக்கும். மடித்து ஊன்றிய கைகளை, நேராக நிமிர்த்தி ஊன்ற வேண்டும். உடலை இரண்டு நிலைகளுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தவும்.

இவை அனைத்தையும், தினமும் ஐந்து முதல் பத்து முறை பொறுமையாகச் செய்ய வேண்டும். இவற்றோடு, நடைப்பயிற்சி மற்றும் `Lower Body Cycling’ எனப்படும் மிதிவண்டிப் பயிற்சியை நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேற்கொண்டால் வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் குறைய ஆரம்பிக்கும்.

80 வயதான என் கணவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்தோம். இப்போது அவருக்குக் கால்கள் வீங்குகின்றன. இது ஏன்? என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?
– காமிலா பானு, கோவை.

ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பது, அலர்ஜியாக இருக்கலாம். இரண்டு கால்களும் வீங்கியிருந்தால் இதயப் பிரச்னை, சத்துக் குறைபாடு அல்லது சிறுநீரகக் குறைபாடாக இருக்கும். பாதிப்புக்கான காரணியைப் பொறுத்து சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.இதய அறுவை சிகிச்சை செய்தவர் என்பதால், அது தொடர்பான பிரச்னையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதயத்தின் இயங்கு திறன் அல்லது ரத்த நாளங்களின் செயல்திறன் குறைபாடாக இருக்கலாம். பைபாஸ் சிகிச்சையின்போது, இதய ரத்த ஓட்டத்தைச் சீராக்க, கால் ரத்தநாளங்களைப் பயன்படுத்துவது வழக்கம்.

அப்படி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரத்தநாளத்தில் பாதிப்பு ஏற்பட்டால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கால் வீக்கம் ஏற்படும். வயது முதிர்வு காரணமாகவும் காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் வால்வுகள் செயலிழந்திருக்கலாம். வயதானவர்களுக்கு மட்டுமல்ல, நீண்டநேரம் நிற்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதயநோய் மருத்துவரை அணுகி, இதய இயங்குதிறன் மற்றும் காலிலுள்ள வால்வுகள் குறித்துப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும். இதயப் பிரச்னை இல்லையென்றால், ‘சீரம் கிரியாட்டினின்’ (Serum Creatinine) என்ற சிறுநீரகப் பரிசோதனை, ஹீமோகுளோபினுக்கான பரிசோதனை செய்து பார்க்கவேண்டியிருக்கும்.

இறுக்கமான உள்ளாடைகளை அணியும்போது சமயத்தில் தோள்பட்டைவலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?”
– தமிழ்மணி, உடுமலைப்பேட்டை.

பொருத்தமற்ற அளவுகளில் பிரேஸியர் அணியும்போது உடலின் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் கழுத்துவலி, முதுகுவலி, தோள்பட்டைவலி ஏற்படும். உடலின் சுற்றளவோடு, மார்பகத்தின் அளவையும் கவனத்தில்கொண்டே வாங்க வேண்டும். சைஸ் 32 A எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், இதில் 32 என்பது உடலின் சுற்றளவைக் குறிக்கும்; A என்பது மார்பகத்தின் அளவைக் (கப் சைஸ்) குறிக்கும்.

இவற்றில் C, சிறிய சைஸையும், B மீடியம் சைஸையும், A பெரிய சைஸையும் குறிக்கும். எனவே, மார்பகத்தின் அளவுக்கு ஏற்ப பிரேஸியரின் கப்பைத் தேர்வுசெய்யுங்கள். பேடட் பிராக்களைத் தவிர்ப்பது நல்லது. வலி இருக்குமாயின் இரவுகளில் உள்ளாடைகளை அணியாமல் இருப்பது நல்லது. தொடர்ந்து உள்ளாடைகளை அணிந்துகொண்டே இருப்பதாலும் வலி உருவாகலாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Related Stories: