×

அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த திருவேட்களம்

திருவேட்களம் வைகாசி விசாகப் பெருவிழா- 22-5-2024

சிதம்பரம் நம் எல்லோருக்கும் தெரியும். கோயில் என்றாலே சைவத்தில் சிதம்பரத்தைத்தான் குறிக்கும். அதுதான் தலையாய கோயில். ஆனால் அந்தச் சிதம்பரத்திற்கு தென்கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அற்புதமான தலம் இருக்கிறது தெரியுமா?. அந்தத் தலத்திற்கு திருவேட்களம் என்று பெயர். புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அந்த ஊரில் தான் இருக்கிறது. இந்தத் தலத்தின் வரலாறு அற்புதமானது. மகாபாரதத்தோடு தொடர்புடையது.

மூங்கில் காட்டில் நடந்த சண்டை

மகாபாரதத்தில் தர்மன் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தான். அதனால் அவன் தன் தம்பிமார்களோடும் மனைவி திரௌபதியோடும் காட்டுக்குப் போகும் படி ஆகிறது. தர்மன் தம்மைச் சார்ந்தவர்களை அழைத்துக்கொண்டு வனம் போகின்றான். அங்கே துருபதன் முதலியோர் அவனை வந்து காணுகின்றனர். அவர்களெல்லாம் ‘‘தர்மனுக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று வருத்தப்பட்டு ஆறுதல் சொல்லுகின்றனர்.

இன்னும் சிலர் ‘‘துரியோதனன் வஞ்சனை செய்துதானே இப்படி உங்களைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் அவனை அப்படியே விட்டுவிடக்கூடாது. சண்டை செய்து நாட்டை மீட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் எல்லாம் உதவுகிறோம்’’ என்று சொல்லுகின்றார்கள்.இதை வில்லிபுத்தூர் ஆழ்வார் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கின்றார்

‘வஞ்சகச் சுபலன் தரு மைந்தனை
வெஞ் சமத்தினில் வீழ, கணத்திடைச்
செஞ் சரத்தின்வழி உயிர் செல்லவே
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார்

கண்ணபிரான் அப்படிக் கோபப்பட்ட நண்பர்களின் கோபத்தை சமாதானம் செய்து தணிக்கிறார். ‘‘இதோ பாருங்கள், அவன் (துரியோதனன்) வஞ்சக மனத்தோடு செய்தால் அந்த வஞ்சக மனமே அவனைக் கெடுத்து விடும். எனவே இந்த கோபத்தை விட்டு விடுங்கள்’’ என்று சமாதானம் கூறுகின்றார். பிறகு தருமனிடம், ‘‘உங்களுடைய அன்னையான குந்திதேவி, பிள்ளைகள், உறவுகள் என அத்தனை பேரும் வனவாசம் அனுபவிக்க வேண்டாம். இவர்களை எல்லாம் உறவினர்கள் இருக்கும் இடத்தில் அனுப்பிவிட்டு நீங்கள் மட்டும் காட்டிலே தங்கி இருங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ என்று யோசனை கூற, தருமன் அப்படியே உறவினர்களை எல்லாம் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டு, மனைவி திரௌபதியோடும் தம்பிகளோடும் காட்டிலே வாழ்ந்து வருகிறார்.

அப்போது வியாசர் அவர்களைப் பார்க்க வருகிறார். அவர் இவருக்கு ஆறுதல் கூறுகின்றார். ‘‘தர்மா, நீ சூதாடியதும் இப்படி எல்லாவற்றையும் இழந்ததும் விதியின் வலிமையால் வந்தது. அந்தக் காலத்தில் நளன் சூதிலே தோற்று கானகம் சென்ற கதையும் உண்டு. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். காலம் வரும். அப்பொழுது நீங்கள் இழந்த ராஜ்யத்தை அடையலாம். அதற்காக இப்பொழுது சும்மா இருக்க வேண்டாம்.

எதிர்காலத்தில் போர் வரும் என்பதால், அதற்கான ஆயுதங்களையும் பலத்தையும் நீங்கள் சேகரித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக அர்ஜுனன் சிவனைக் குறித்து தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்று வர வேண்டும்’’ என்கிறார். அதன் பின் தர்மன் விரும்பியவாறு, அர்ஜுனன் தவவேடம் கொண்டு, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவதற்காக கடும் தவம் புரிகின்றான். இந்த தவக்கோலத்தை அப்பர் பெருமான் திருச்சேறை பதிகத்தில் பின் வருமாறு பாடுகின்றார்.

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய்
உலப்பில் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்து நீள்சிலை
விசயனுக்கு
வென்றிகொள் வேடனாகி விரும்பி வெம்
கானகத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச்
செல்வனாரே.

“நீண்ட வில்லினை உடைய அர்ஜுனன் மனம் ஒன்றி பல காலங்கள் சிவபிரானின் திருப்பாதங்களையே நினைத்து தவம் செய்தான்,” என்கிறார்.நெருப்பின் நடுவிலே அர்ஜுனன் ஒற்றை காலில் (ஏகபாத) அயராது தவம் செய்கின்றான். இதைக் கண்டு தேவர்களும் அஞ்சுகின்றனர். அவர்கள் அர்ஜுனனின் தவத்தைக் கலைக்கப் பலவாறு முயற்சிகள் செய்கின்றனர். மன்மதனும் அர்ஜுனன் மீது மலர்க் கணைகளை வீசி அவனுடைய தவத்தைக் கலைக்க முயல்கின்றான். ஆனால் மன்மதன் களைத்துவிடுகின்றான். அர்ஜுனனின் தவத்தை யாராலும் கலைக்க முடியவில்லை.

இப்பொழுது உமாதேவியார் சிவபெருமானிடம் கூறி அர்ஜுனனுக்கு நீங்கள் அருள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். அர்ஜுனனை சோதிக்க எண்ணிய சிவபெருமான் உமையோடும் கணங்களோடும் வேட வடிவம் கொண்டு வருகின்றார். அந்த நேரத்தில் அர்ஜுனனைக் கொல்ல மூகாசுரன் என்ற அசுரன் துரியோதனனால் ஏவப்பட்டு பன்றி வடிவம் கொண்டு அர்ஜுனனை அழிக்க ஆவேசமாக வருகின்றான். முதலில் இந்த பன்றியை அர்ஜுனன் பார்க்கவில்லை. அந்த கொடூரமான பன்றியைப் பார்த்துவிட்ட வேடனாக வந்த சிவபெருமான், பன்றியை அழிப்பதற் காக அம்பு எய்கிறார். அம்பு பட்ட ஓசையில் தவம் கலைந்த அர்ச்சுனன் உடனே வில்லை வளைத்து அம்பைப் பூட்டி அந்தப் பன்றியை தானும் அடிக்கின்றான்.

இரண்டு அம்புகளும் அடுத்தடுத்து அந்தப் பன்றியின் மீது பட்டு விடவே, வேடம் கலைந்த மூகா சுரன் சாகின்றான். இருவரும் ஒரே சமயத்தில் பன்றியை அடித்ததால், யார் முதலில் அடித்தது என்ற தகராறு வந்துவிட்டது. வாய்த் தகராறு முற்றி சண்டையாக மாற, முதலில் வில்லினால் போர் புரிந்தனர். போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க
வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களி
வண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பல
வாணர்க்கு ஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா
கச்சிஏகம்பனே.
(42 – திருவேகம்பமாலை)- பட்டினத்தார் என்று பாடுகிறார்.

வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் “உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது” என சமாதானப்படுத்தி ‘‘சற்குணா’’ (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். பிறகு மற்போர்புரிய தொடங்குகின்றனர். இதில் வேடனின் கை ஓங்கியது. சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். அப்பொழுது சிவபெருமான் அவனுக்குக் காட்சி தருகின்றார். அர்ஜுனன் தவக்கோலத்தில் சிவபெருமானின் சிவக்கோலமான திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்து ஆடுகின்றான்.

ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;- நயந்த சிந்தையான்.
என்று பலவாறு இறைவனைத் துதிக்கின்றான்
ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே பவளமாம் பரம ரூபியே
இப்படி எல்லாம் அவன் சிவபெரு

மானைப் புகழ்ந்து பாட சிவபெருமான் அர்ஜுனனைத் தழுவி அருள்மொழி பலவும் கூறி பாசுபதாஸ்திரத்தைத் தருகின்றார். இப்படித் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் பெற்ற தலம்தான் இந்த திருவேட்களம் என்று தலபுராணம் கூறுகின்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும்.

மகுடமணிந்து காட்சி தரும் நடராஜர்

இனி கோயில் அமைப்பைக் காண்போம். சிறிய கோயில் தான். அற்புதமான ராஜகோபுரம். நளதீர்த்தம் என்று பெயர் பெற்ற அழகான திருக்குளத்தின் பின்னணியில் கோயில் கோபுரம் எழிலுடன் காட்சி தரும். உள்ளே சிறிய பிரகாரம்தான். கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர் சித்தி விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.

சூரியனும் சந்திரனும் அருகருகே உள்ளனர்.நடராஜர் இங்கு மகுடமணிந்து காட்சி தருகிறார். கிணற்றில் நல்ல தீர்த்தம் கிடைக்கிறது. கிழக்கு நோக்கி பாசுபதீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்கவடிவில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். இறைவிக்கு நல்ல நாயகி என்று பெயர். சம்மந்தரும் அப்பரும் தலத்தைப் பாடி இருக்கின்றார்கள். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்தில் இருப்பதற்கு அஞ்சி இங்கே இருந்து கொண்டு சிதம்பரத்திற்குப் போய் சபாநாயகரை தரிசித்து வருவாராம். இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமையான தலம். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபடுவது பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள். சந்நதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. முன்மண்டபத் தூண்களில் அரிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. அம்பிகையின் சந்நதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம்புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்றும் இன்பந் தழைக்க இருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே

என்பது திருநாவுக்கரசர் தேவாரம். இந்தப் பாடலில். ‘‘நீங்கள் மகிழ்ச்சியோடு நிலைத்த வாழ்வு வாழ வேண்டுமா? அதற்கு உங்கள் பூர்வ பாவங்கள் (முன் வினைகள்) தீரவேண்டும். அதற்கு எளிய வழி ஒரு முறை திருவேட்களம் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசியுங்கள்” என்கிறார் எளிய வழிதானே. வைகாசியில் பாசுபதம் அருளிய பெருவிழாவில் பாசுதேஸ்வரரைச் சென்று தரிசிப்போம்.

திருவேட்களம்

1. இறைவர் திருப்பெயர்: பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்.

2.இறைவியார் திருப்பெயர்: சற்குணாம்பாள், நல்லநாயகி.

3. தல மரம்: மூங்கில்

4. தீர்த்தம்: கோயிலின் எதிரில் உள்ளது. நள தீர்த்தம்

5. வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், நாரதர், அர்ச்சுனன் முதலியோர்.

6. சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம்

7. எப்படிச்செல்வது?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புகை வண்டி நிலையத்திலிருந்தும் கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு.

8.கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முனைவர் ஸ்ரீராம்

 

The post அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த திருவேட்களம் appeared first on Dinakaran.

Tags : Tiruvedkalam ,Pasupadastra ,Arjuna ,Thiruvedkalam ,Vaikasi Visakha Festival ,Chidambaram ,Saivism ,Basupadastra ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...