×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி செய்து தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, கணேசரதம், கிருஷ்ணா மண்டபம், மகிஷாசூரமர்த்தினி, திருமூர்த்தி மண்டபம், புலிக்குகை, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை அழுகுர செதுக்கினர்.

இப்புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.  மாமல்லபுரத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் தினமும் சொகுசு பேருந்து மற்றும் கார்களில் குவிந்து வருகின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரை கோயில் வளாகத்தில் ஜாலியாக சுற்றி ஓடி பிடித்து விளையாடுவது, செல்பி எடுப்பது, புல்தரையில் அமர்ந்து பொழுதை கழிப்பது என ஜாலியாக உலா வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் தாகத்தை தீர்க்க கடற்கரை கோயில் வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை கோயில் முதலாவது நுழைவு வாயில் அருகே 3 குழாய்களும், இரண்டாவது நுழைவு அருகே 1 குழாய் என மொத்தம் 4 குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை தங்கு தடையின்றி குடிநீர் வந்தது. இந்நிலையில், 6 மாதங்களாக இந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது. புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு தாகத்தோடு குழாய்களில் தண்ணீர் பிடித்து குடிக்க வரும் பயணிகள் தண்ணீர் வராமல் இருப்பதை கண்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறை நிர்வாகத்துக்கு பயணிகளின் தாகத்தை தீர்க்க குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சுற்றுலாப் பயணிகளின் தாக்கத்தை தீர்க்க கடற்கரை கோயில் வாளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி செய்து தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram beach temple complex ,Mamallapuram ,Pallava ,Arjuna Tapasu ,Ganesaratham ,Krishna Mandapam ,
× RELATED புராதன சின்னங்கள் வளாகத்தில் உயரமான கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்