தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: வேட்பாளர்களும் நேரில் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். மேலும் வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சசிகாந்த் செந்தில், எம்.கே.விஷ்ணுபிரசாத், வழக்கறிஞர் ஆர்.சுதா, கார்த்திக் சிதம்பரம், ராபர்ட் புரூஸ், கோபிநாத், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், வைத்தியலிங்கம் ஆகிய 10 பேர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அவர்கள் வெற்றி பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு காதர் மொகிதீன் நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார். மேலும் அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சும், அந்த பேச்சை கேட்பதற்கு கூடியிருந்த கூட்டமும் வடமாநிலம் முழுவதும் எதிரொலித்து இருக்கிறது என்றார்.

அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மதிவேந்தன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரசாரங்கள் எல்லாம் மொழி பெயர்க்கப்பட்டு வடமாநிலங்களில் தேர்தல் பிரசார கூட்டத்திலே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதை தெரிந்து கொண்டு தான் பிரதமர் மோடி ஒரு ஆதங்கத்திலே, தோல்வி பயத்திலே இன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.  மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் சந்தித்து பேசினார்.

பொது செயலாளர் தாமோதர கிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் கோகுல கிருஷ்ணன், முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை கழக நிர்வாகிகள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் சந்தித்தனர். மேலும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் க.செல்வம் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.  மேலும் அமைச்சர் கா.ராமச்சந்திரன், எம்பிக்கள் திருச்சி சிவா, கிரிராஜன், கனிமொழி சோமு, அப்துல்லா ஆகியோரும் சந்தித்து பேசினர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் உ.மதிவாணனும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

* டெல்லி உள்பட வட மாநிலங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்புக்கு பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், எங்களுடைய வெற்றி வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த சந்திப்பு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியோடு வந்து முதல்வரை சந்திப்போம். டெல்லி உள்பட வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

The post தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: வேட்பாளர்களும் நேரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: