தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: 3 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

கோவை: தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை- அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அம்மனுக்கு அணிவித்த புடவைகள் ஏலம் விடப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புடவைகளை ஏலத்தில் எடுத்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. கோனியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, காலீஸ்வரா மில் ரோடு, சோமசுந்தரா மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, டிஎன்எஸ்டி டெப்போ, ஜிடி டிரைவிங் பள்ளி வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதுதவிர ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி ஊர்வலத்தையொட்டி கோவை மாநகரில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

The post தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: 3 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: