கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை

சிவகங்கை, ஏப்.18: சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை(ஜுலை முதல் செப்டம்பர்) 309.6மி.மீ, வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர்) 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும்.

ஆனால் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டுதோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008 முதல் 2021ம் ஆண்டு வரை இடைப்பட்ட 13ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283 மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2012ம் ஆண்டு 549மி.மீ மழை பெய்ததே இந்த 14ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும். 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது.

2014ம் ஆண்டு 920மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் 1097மி.மீ, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பெய்தது. 2017ம் ஆண்டு 976.6மி.மீ, 2018ம் ஆண்டு 924.4மி.மீ, 2019ம் ஆண்டு 1006.7மி.மீ, 2020ம் ஆண்டு 1117.6மி.மீ, 2021ம் ஆண்டு 1276.77மி.மீ மழை பெய்தது. 2022ம் ஆண்டு 1127.99மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை 286.3மி.மீ, வடகிழக்கு பருவ மழை 425.6மி.மீ பெய்துள்ளது. ஒட்டு மொத்தமாக ஆண்டு முழுவதும் 1005.9மி.மீ மழை பெய்துள்ளது.

2017ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தொடர்ந்து 7ஆண்டுகளாக மழை, சராசரி அளவை விட கூடுதலாகவே பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. தென் மேற்கு பருவ மழை ஆண்டு தோறும் ஒரே அளவில் இருப்பதில்லை என்பதால் இந்த காலக்கட்டத்தில் விவசாயம் செய்யப்படுவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென் மேற்கு பருவ மழையும் சராசரி அளவில் பெய்து வருகிறது.

மழையளவு தொடர்ந்து 7ஆண்டுகளாக சராசரியை விட குறையாமல் பெய்தாலும், விவசாயம் இந்த ஆண்டுகளில் முழுமையான விளைச்சலுடன் இல்லை. கடந்த ஆண்டிலும் சராசரியைவிட கூடுதல் மழை பதிவான நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதிய நீர் இல்லாமல் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் கூறியதாவது:தென்மேற்கு பருவ மழையில் பெரிய அளவில் விவசாயம் இருக்காது என்றாலும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தேவையை இம்மழை பூர்த்தி செய்யும். கடந்த 7ஆண்டுகளாக ஆண்டிற்கான சராசரி மழை அளவைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது என்பது மழை கணக்கீட்டின் மூலம் மட்மே தெரிகிறது. ஆனால் கண்மாய், குளங்களில் இந்த மழை நீர் இல்லை.

மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போதிய மழை பெய்யும் நிலையில் அந்த நீர் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

The post கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: