102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; மக்களவை முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள் போட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக, 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த முதல்கட்ட தேர்தல் 8 ஒன்றிய அமைச்சர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது.

ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியிலும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியிலும், ஜிதேந்திர சிங் ஜம்முவின் உதம்பூரிலும் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கி உள்ளனர். இதில், ரிஜிஜூவை எதிர்த்து முன்னாள் முதல்வரும், அருணாச்சல் காங்கிரஸ் தலைவருமான நபம் துகி களமிறக்கப்பட்டுள்ளார்.

ஒன்றிய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சர்பானந்தா சோனோவால் அசாமின் திப்ருகர் தொகுதியிலும், உபியின் முசாபர்நகர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பலியனும், மாநிலங்களவை எம்பியும், ஒன்றிய அமைச்சருமான பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் அல்வார் தொகுதியிலும், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தின் நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர அரசியலுக்கு திரும்புவதற்காக ஆளுநர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேற்கு திரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சாஹாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

The post 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; மக்களவை முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: