நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை, ஏப்.18: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக இன்று கூடுதலாக 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன் பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் அதிகப்படியானவர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிக்க செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இன்றும் கூடுதலாக 2,970 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் கிளாம்பாக்கம், தாம்பரம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 4 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கூறிய மூன்று பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் மக்கள் சிரமமின்றி திரும்பும் வகையில், போதிய அளவில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21ம் தேதிகளில் தினமும் இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கும் 6,009 பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்றனர்.

ஆம்னியில் அதிக கட்டணமா?
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை மதுரை, திருச்சி, கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் 1,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில பேருந்துகளில் ரூ.500 முதல் 1000 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: