நம்பிக்கையோடு போராடு உலகை வெல்லலாம்!

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, இரண்டு கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்ததால் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், தங்கள் மனதை இறைநம்பிக்கையுடன் தேற்றிக் கொண்டு, அக்குழந்தைக்கு நிக் உஜிசிக் என பெயர் வைத்தனர். அந்தக் குழந்தைக்கு கைகளோ கால்களோ முற்றிலும் இல்லை. இவைகளுக்கு பதிலாக, அக்குழந்தையின் இடுப்போடு இரு விரல்கள் மட்டும் ஒட்டியபடி இருந்தது. அந்த இரு விரல்களையும் ஆபரேஷன் செய்து மருத்துவர்கள் பிரித்தனர். பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் வீட்டின் மூலையில் பொம்மையைப் போல கிடத்தப்பட்டிருப்பான். வளர வளர மனகாயங்களும், தன் அகாலப் பிறப்பை பற்றிய கேள்விகளும் மனக் கதவை தட்டிக் கொண்டே இருந்தது.

பள்ளியில் சேர்க்க நிக் உஜிசிக்கை அழைத்துச் சென்ற பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எந்தப் பள்ளியும் அவனைச் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பள்ளியில் சேர்த்தனர். பள்ளியில் பல அவமானங்களைச் சந்தித்தார். அவரோடு பழகுவதற்கு நண்பர்கள் முன்வரவில்லை. சில முரட்டு மாணவர்கள் அவரது தோற்றத்தைக் கேலி செய்தனர். கிண்டலும் கேலியும் உச்சத்தைத் தொட்டபோது, குளிக்கும் தண்ணீர்த் தொட்டியில் தற்கொலைக்கு முயன்ற நிக் உஜிசிக்கை அவரது பெற்றோர் காப்பாற்றி சிகிச்சை அளித்தனர்.

‘‘மகனே, நீ பிறந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கம் நிறைவேற இறைநம்பிக்கையுடன் ஜெபம் பண்ணு’’ என பெற்றோர் அறிவுரையும், ஆறுதலையும் வழங்கினர். கிறிஸ்துவின் மேல் நிக் உஜிசிக் வைத்த ஆழமான விசுவாசமும் உறுதியான மனதிடமும் அவனது எதிர்மறையான சூழ்நிலையில் பெரும் பலமாக காணப்பட்டது. நடை, உடை பாவனைகளில் கம்பீரம் வந்தது. அவமானப்பட்ட அதே பள்ளியில் மாணவர் தலைவரானர். கல்லூரியில் சேர்ந்தபோது அங்கும் கதாநாயகனாகக் கலக்கினார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக் இன்று ஸ்கேட்டிங் செய்கிறார், நீச்சல் போட்டிகளில் பங்கேற்கிறார். செயற்கைக் கை பொருத்தி கார் ஓட்டுகிறார்.

தனது பாதத்தில் ஒட்டியிருக்கும் 2 சிறு விரல்களுக்கிடையே பேனாவை சொருகி ஓவியம் வரைகிறார், விரைவாக எழுதுகிறார், நிமிடத்துக்கு 45 வார்த்தைகளை கணினியில் டைப் செய்கிறார், எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் இசைக்கிறார், உலகெங்கும் பயணித்து அருளுரை வழங்குகிறார். இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த அவரது விசுவாசமும், விடாமுயற்சியும்தான் அவரது கைகளாகவும், கால்களாகவும் இன்று செயல்படுகிறது.

திருமணம் செய்ய தகுதியே இல்லை என பலரால் அவமதிக்கப்பட்ட இவர், கானே மியாகரா என்ற பெண்ணை திருமணம் செய்து நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகவும், உள்ளார். விரக்தியின் எல்லைவரை சென்று, பின் நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிக் உஜிசிக், இப்போது மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுத்தருகிறார். இதுவரை 58 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 60 லட்சம் பேருக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி அளித்திருக்கிறார். இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக் ‘‘அகாலப் பிறவியாக பிறந்த தன்னால் சாதிக்க முடிகிறது என்றால், உங்களால் ஏன் முடியாது?’’ என மேடைகள் தோறும் சவால் விடுகிறார்.

இறை மக்களே, உங்கள் தோற்றத்தையோ, இயலாமையையோ, குடும்ப சூழ்நிலைகளையோ குறித்து வருத்தப்படுகிறீர்களா? ‘‘கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?’ (மத். 6.27) என தேவன் கேட்கிறார். ஆகவே, கவலைப்படுவதினால் ஒரு பயனுமில்லை, உங்கள் பலவீனத்தை பலமாக்கும் சக்தியை தேவன் உங்களுக்குள் வைத்திருக்கிறார்.

‘‘அவர் (தேவன்) சிறியனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்’’ (1 சாமு. 2:8) என்ற இறைவாக்கை உண்மையுடன் உரிமை கொண்டாடுங்கள். தேவன் மேல் ஆழமான நம்பிக்கை வையுங்கள். சோர்ந்திடாமல் செயல்படுங்கள். நீங்கள் சாதிப்பது உறுதி.

தொகுப்பு: அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post நம்பிக்கையோடு போராடு உலகை வெல்லலாம்! appeared first on Dinakaran.

Related Stories: