திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்கள் இல்லாமல் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் திருவள்ளூர் தொகுதியில் மும்முனை போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின்றி கூட்டணி கட்சிகளில் புதுமுக வேட்பாளர்கள் 14 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதியில் முதலாவது தொகுதியாகவும், பட்டியலின வேட்பாளர்கள் போட்டியிடும் (தனி) தொகுதியாகவும் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி உள்ளது. கடந்த 2008ல் தொகுதி சீரமைப்பிற்கு பின் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

இந்த தொகுதி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் 2009, 2014, 2019 என 3 முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்பேரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எழும்பூர் எம்எல்ஏவான கு.நல்லதம்பியும், பாஜ வேட்பாளராக பொன் வி.பாலகணபதியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெகதீஷ் சந்தரும், பகுஜன் சமாஜ் வேட்பாளராக டி.தமிழ்மதியும் என 14 பேர் போட்டியில் உள்ளனர். அதன்படி 2009ல் திமுக வேட்பாளர் காயத்ரி ஸ்ரீதரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் – 31,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2014ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமாரை விட அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.வேணுகோபால் – 3,23,430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2019ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபாலை விட திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கு.ஜெயக்குமார் – 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற உள்ள 18வது நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளான தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இங்கு தொடர்ந்து ஆறுகளிலும், ஏரிகளிலும் அரசு அனுமதியோடும், அனுமதியின்றியும் ஆற்று மணல் மற்றும் சவுடு மண் அதிகளவில் எடுக்கப்படுகின்றன. இங்கு முக்கிய நீர் ஆதாரமான கொசஸ்தலை, கூவம் மற்றும் ஆரணி ஆறுகளில் அதிக அளவில் நீரைத் தேக்கி வைக்க தடுப்பணை கட்டவில்லை.

மேலும் பெரியது, சிறியதுமாக உள்ள 2,500க்கும் மேற்பட்ட ஏரிகளில் 800 பெரிய ஏரிகளை ஆழப்படுத்தாமலும், வரத்துக் கால்வாய் தூர்வாரப்படாமலும் உள்ளன. இதனால், மழைக்காலங்களில் அதிகளவில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையுள்ளது. இதனால் கோடைக்காலங்களில் குடிநீர் பிரச்னை என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக செல்லும் விரைவு ரயில்களும், திருவள்ளூர் வழியாக மீண்டும் சென்னைக்கு செல்லும் விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும்.

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது போன்ற பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சி, கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் ஐஏஎஸ் முடித்து கர்நாடக மாநிலத்தில் 3 மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக கலெக்டராக பணிபுரிந்துள்ளார். 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பிரசார யூகம் வகித்து முக்கிய பங்காற்றியுள்ளார்.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதால், கலெக்டராக இருந்த சசிகாந்த் பொதுமக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் ? யாரை அணுக வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர். இவர், நடிகர் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர். அப்பகுதியில் மிதிவண்டி கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், 2011ல் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேமுதிகவில் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து கு.நல்லதம்பிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் அவருக்கு அனுதாப வாக்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஜ வேட்பாளர் பொன் வி.பாலகணபதி தற்போது பாஜ மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இதனால் இங்கு போட்டியிட கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் கடந்த 10 ஆண்டுகள் சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர். முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சியாளராக உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.தமிழ்மதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரும் கட்சியின் தேசிய அளவிலான கொள்கைகளை வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் தனி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுவதால் வெற்றி வாகை சூட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

* கோயில், ஏரிகள் நிறைந்த தொகுதி
தீராத நோயைத் தீர்த்து வைக்கும் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருத்தலம், திருவாலங்காடு, வாடரண்யேஸ்வரர் கோயில், பழையனூர் நீலி கோயில், தென்னிந்தியாவில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு அடையாளமாக திகழும் மிகவும் தொன்மையான பூண்டி அடுத்த கூடியம் குகை, அதிராம்பட்டினம், நெய்வேலி, வடமதுரை ஆகியவை இந்த தொகுதியில் உள்ளன.

இதேபோல், பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்கள், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு படை உடைகள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி ஏரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. அத்துடன், இங்கு நெல், கரும்பு, நிலக்கடலை மாம்பழம் மற்றும் பூ உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

The post திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்கள் இல்லாமல் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் திருவள்ளூர் தொகுதியில் மும்முனை போட்டி appeared first on Dinakaran.

Related Stories: