திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை விழா 63 நாயன்மார்கள் வீதியுலா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழாவில், 63 நாயன்மார்கள் வீதியுலா வந்தனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பட்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மீது கொடியேற்றத்துடன் துவங்கியது.

இத்திருவிழாவின், 3ம் நாள் உற்சவமான 63 நாயன்மார்கள் வீதி உலா நேற்று காலை நடந்தது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் அமர்த்தப்பட்டு தாழக் கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோயிலிருந்து மேள, தாளங்களுடன் புறப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக வெளியே வந்து கவரைத்தெரு, அக்ரகார வீதி வழியாக வேதகிரீஸ்வரர் மலையடிவாரம் வந்து மலையை சுற்றி 63 நாயன்மார்களும் (கிரி) வலம் வந்தனர்.

நாயன்மார்கள் வீதி உலாவையொட்டி, திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமச்சிவாய’ என்ற வேத மந்திரங்கள் முழங்க கிரிவலம் வந்தனர். இந்த 63 நாயன்மார்கள் வீதி உலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் புவியரசு மற்றும் மேலாளர் விஜயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை விழா 63 நாயன்மார்கள் வீதியுலா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: