வலிமையையும் மென்மையையும் சேர்ந்தளிக்கும் திருநாமம்!

காமேஸ ஜ்ஞாத ஸௌபாக்ய
மார்தவோரு த்வயாந்விதா

கீழேயுள்ளவாறு பிரித்தும்
சொல்லலாம்.

காமேஸ ஜ்ஞாத ஸௌபாக்ய
மார்தவ ஊரு த்வய அந்விதா

இதற்கு முந்தைய நாமமான ரத்ன கிங்கிணிகா ரம்ய ரசனா தாம பூஷிதா என்பதைப் பார்க்கும்போது நாத விஷயங்களான அநாகதம் பற்றி பார்த்தோம்.லலிதா சஹஸ்ரநாமத்தைப் பொறுத்த வரையில் நாம் பார்த்துக் கொண்டு வரும் நாமத்தின் பொருளை மிக கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்தந்த நாமத்தின் பொருளானது முற்றிலும் அந்த பிரம்ம சொரூபமான அம்பிகையைத்தான் வர்ணிக்கின்றது. வர்ணித்தல் என்பது அந்த அம்பிகையின் சொரூபம் என்பது மனதைத் தாண்டியிருந்தாலும் அதை எப்படி அனுபூதியில் உணர்வது என்றுதான் சஹஸ்ரநாமம் விளக்குகின்றது. இதில் இருக்கும் பரம ரகசியமே இந்த பொருளின் ஆழத்தை உணரும்போது இந்த மனதால் புரிந்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கே நம் அகங்காரம் வருகின்றது.

அப்படி வரும்போது மெல்ல மெல்ல மனம் அமைதியாகின்றது. நமக்கு அப்பாலுள்ள ஒரு விஷயம் வேறொரு தன்மையில் வெளிப்படுகின்றது. அதுவே உங்களுக்கு உங்களை காட்டுகின்றது. சரி, இப்போது நாமத்திற்கு வருவோம். இதற்கு முன்பு நாம் மூன்று கூடங்கள் என்றொரு விஷயம் பார்த்தோம். வாக்பவ கூடம், மத்ய கூடம், சக்தி கூடம் என்று பார்த்தோம். அம்பாளுடைய இடைப்பகுதிக்கு கீழேயுள்ள பகுதிகளை வர்ணிக்கும்போது சக்தி கூடம் என்று பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது இந்த நாமம் சக்தி கூடத்தில்தான் வருகின்றது. மேலும், இந்த நாமம் அதிசூட்சுமமாக இருக்கிறது. இதற்கு முன்னாலுள்ள அல்லது இதற்கு பின்னாலுள்ள நாமங்களிலெல்லாம் அம்பாளுடைய கேசம் முதல் பாதம் வர்ணனைகளை வசின்யாதி வாக் தேவதைகள் காட்டிக் கொடுக்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த உவமைகளை சொல்லி நமக்குப் புரியும்படி சொல்லி காண்பித்துக் கொடுத்தார்கள். ஏன் இந்த நாமத்தை அதிசூட்சுமமான நாமம் என்று சொல்கின்றோம் எனில், இந்த நாமத்தில் வசின்யாதி வாக் தேவதைகள் அம்பாளின் ஒரு அங்கத்தைப்பற்றி சொல்கிறார்கள். ஆனால், அந்த அங்கத்தை காண்பித்துக் கொடுக்கவில்லை. ஏன் காண்பித்து கொடுக்கவில்லையெனில்… அதற்கு அவர்கள் என்ன காரணத்தை சொல்கிறார்கள் எனில்.. அந்த அங்கத்தைப்பற்றிய விஷயமானது காமேஸ்வரராக இருக்கக்கூடிய சிவபெருமானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்கள். அதாவது வசின்யாதி வாக் தேவதைகளுக்கே தெரியாது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாமத்தில் எந்த அங்கம் வர்ணிக்கப்படுகின்றதோ அந்த அங்கத்தினுடைய விஷயம் காமேஸ்வரருக்கு மட்டும் தான் தெரியும். காமேஸ்வரரான சிவபெருமானைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது. அதனால், இந்த நாமமானது அதிரகஸ்யமானது. அதி சூட்சுமமானது. இதில் என்ன பெரிய விஷயமெனில் காமேஸ்வரரான சிவபெருமானுக்கு தெரிந்தாலும் கூட, அதை வெளிப்படுத்த முடியாது.
அப்படிப்பட்ட அந்த அங்கம் என்னவென்று வசின்யாதி வாக்தேவதைகள் இப்படிச் சொல்கிறார்கள்…. ஊரு த்வயாந்விதா… இந்த நாமத்திலுள்ள கடைசி வார்த்தையான ஊரு த்வயாந்விதா என்பதில் ஊரு என்கிற சமஸ்கிருதச் சொல்லுக்கு தொடை என்று பொருள்.

தொடைப்பகுதி. த்வயாந்விதா என்றால் இரண்டு பொருள். அம்பிகையினுடைய தொடைப்பகுதியைப்பற்றிய நாமமே இது. இதில் மார்தவம் என்றொரு வார்த்தை வருகின்றது. இதற்கு மிருதுத்தன்மை என்று பொருள். மார்தவோரு த்வயாந்விதா என்றால் மிகமிக softness மிகமிக மிருதுத்தன்மையோடு இருக்கக் கூடிய அம்பிகையினுடைய தொடைப் பகுதி என்று சொல்லிவிட்டு… அதோடு நிற்காமல், அவர்களுக்கு திருப்தி வரவில்லை. மீண்டும் இன்னொரு வார்த்தையான ஸௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா என்று சேர்த்துச் சொல்கிறார்கள். சாதாரண உலகியல் வழக்கில் மிருதுத்தன்மையை சொல்லிவிடாதீர்கள். இந்த அம்பிகையின் மிருதுத் தன்மை இருக்கிறதே அது வெறும் மிருதுத்தன்மை மட்டும் கிடையாது.

அது பரம சௌபாக்கியமானது. பரம மங்களகரமானது. என்று சொன்னதோடு நிற்காமல் இன்னும் இரண்டு வார்த்தைகளை சேர்க்கிறார்கள். அதாவது காமேஸ க்ஞாத என்று சேர்க்கிறார்கள். க்ஞாதம் என்றால் தெரிந்து கொள்வது என்று பொருள். காமேஸ க்ஞாதம் எனில்… காமேஸ்வரரால் மட்டுமே தெரிந்து கொள்ளப்பட்டது. காமேஸ்வரருக்கு மட்டும்தான் தெரியும். எது தெரியும். காமேஸ க்ஞாத… சௌபாக்கிய சௌபாக்கியமான, பரம மங்களமான மிருதுத் தன்மையுடைய இரண்டு தொடைப்பகுதிகளை உடையவள். ஒவ்வொரு நாமத்தையும் சொல்லிக் கொண்டே வந்தவர்கள் இந்த நாமத்திற்கு வந்தவுடன் ஏன் காமேஸ்வரருக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்ல வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்.

தொடைப்பகுதி என்று சொல்லும்போது மடியில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையை எது தாங்குகின்றது. தாய் தாங்குகிறாள் என்று சொல்கிறோம். தாயானவளின் எந்த அங்கம் குழந்தையை தாங்குகின்றது என்று பார்த்தால் தாயினுடைய தொடைப்பகுதிதான் குழந்தையை தாங்குகின்றது. எது ஒன்று மிகமிக மிருதுவாக இருக்கிறதோ அதற்கு தாங்கக்கூடிய சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாங்கக்கூடிய சக்தி இருக்காது. ஒரு புஷ்பத்தை எடுத்துக் கொண்டால் அந்தப் பூவானது மிகமிக மிருதுவாக இருக்கின்றது எனில் அந்தப் பூவின் மீது ஏதேனும் கனமான பொருளை வைக்கமுடியுமா? வைத்தால் அந்தப் பூவானது கசங்கி விடும். ஏனெனில், அந்தப் பூவானது அத்தனை மிருதுவாக இருக்கின்றது. ஆனால், தாயினுடைய தொடைப்பகுதி மிகமிக மென்மையாக இருக்கின்றது.

அதுவே தான் குழந்தையையும் தாங்குகின்றது. எது ஒன்று மென்மையாக இருக்கக்கூடியதோ அது எதையும் தாங்காது என்று சாதாரணமாக சொல்லக்கூடியது.ஆனால், அதுவே ஒரு தாயினுடைய அன்புக்கு வரும்போது மென்மையான பகுதியில் அந்தக் குழந்தையை உட்கார வைத்துக் கொள்ளும்போது அந்தக் குழந்தையின் கனத்தை தாங்குகின்றது. இந்த முரண்பாட்டை பார்த்தோமானால் நமக்குக் கிடைக்கும் ஒரே விடை. இதுதான் அம்பிகையினுடைய கருணை. இதுதான் அம்பிகை நம்மீது செய்யக்கூடிய அனுக்கிரகம். ரொம்ப ரொம்ப மென்மையானது. அதி மென்மையாது. அதை வர்ணிக்கவே முடியாது. ஆனால், அதே நேரத்தில் மிகமிக வலிமையானது.

அதே நேரத்தில் தன்னுடைய பக்தர்களை காப்பாற்றுவதில் அம்பிகையினுடைய அனுக்கிரகம் அம்பிகையினுடைய கருணை என்பது மென்மையிலும் மென்மையானது. வலிமையிலும் வலிமையானது. எதுவொன்று மென்மையாக இருக்கின்றதோ அது வலிமையாக இருக்காது. எதுவொன்று வலிமையாக இருக்கின்றதோ அது மென்மையாக இருக்காது. ஆனால், அம்பிகையின் கருணையானது அனுக்கிரகமானது மென்மையாகவும் இருக்கிறது. வலிமையாகவும் இருக்கின்றது. அப்போது இதனுடைய ரகசியம் என்ன என்று கேட்டீர்கள் எனில், வசின்யாதி வாக் தேவதைகள் சொல்கிறார்கள்… இந்த ரகசியமானது சிவபெருமானான காமேஸ்வரரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.

அந்த அம்பிகையினுடைய மென்மையையும் கருணையையும் அனுக்கிரகத்தையும் பரமானந்தத்தையும் நன்கு அனுபவித்துவிட்டு அருணகிரிநாதர் சொல்வதுபோல சும்மாயிரு சொல்லற என்று இருக்க வேண்டுமே தவிர… இது எப்படி மென்மையாகவும் வலிமையாகவும் கருணையாகவும் இருக்கின்றது என்பதை நம் ஆய்வால் விளங்கிக் கொடுக்க முடியாது. ஆராய்ச்சியும் செய்யக் கூடாது. ஏன் செய்யக்கூடாது எனில்… அது காமேஸ்வரரான சிவபெருமானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவும் முடியாது. அதனால், நம் மனம் தாண்டிய விஷயங்களை அப்படியே விட்டுவிட்டு அம்பிகையின் அருட் போக்கிற்கே செல்வதுதான் நல்லது.

அது சரி… இது காமேஸ்வரருக்கு தெரியும் என்பதால் அவர் ஏதாவது வெளிப்படுத்துவாரா… எனில் அதை அவர் வெளிப்படுத்த மாட்டார். ஏனெனில், இந்த மென்மையிலும் மென்மையான வலிமையிலும் வலிமையான ரகசியத்தில்தான் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது இந்த பிரபஞ்ச ரகசியத்தை சுவாமியும் அம்பாளும் வெளிப்படுத்திக் காண்பிப்பார்களா எனில் வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டார்கள். சரி, அப்படி ஒரு ஞானம் நமக்கு வரும்போது நாம் அறிந்து கொண்டுவிடுவோமா எனில்… அப்படியொரு ஞானம் வரும்போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும். ஞானம் வருவதற்கு முன்பு ஒரு சாதகனின் நிலையில் அந்த ரகசியம் தெரியாது.

அந்த விஷயத்தை அறிந்த பிறகு அதன் ரகசியத்தை அறிந்து கொள்ள அவசியமே இல்லாமல் போய்விடும். அப்பேற்பட்ட ஞான நிலையில் மௌனமாக இருப்போமே தவிர வேறு எதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயமே இராது. அப்போது இந்த விஷயம் அனைத்தும் காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியும். ஆனால், அவர் அதை வெளிப்படுத்தவும் மாட்டார். ஏனெனில், அந்த ரகசியத்தின் சொரூபமாக இருப்பதே அம்பிகைதான். ஆனால், அந்த ரகசியம் நமக்கு தெரியவில்லை என்பதால் அது ஏதோ நம்மைவிட்டு தூரமாக இருக்கிறதா என்று கேட்டால், அதுவும் கிடையாது. ஏனெனில், அம்பிகையின் அந்த ரகசியம்தான் அந்த ரகசிய ஞானம்தான், வெளிப்படுத்த முடியாத, வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ரகசியம்தான் நம்மை தாங்கிக் கொண்டிருக்கிறது.

அம்பிகையின் அந்த கருணை ஒரு ரகசியம். அதற்கு எந்த காரணமும் கிடையாது. அதை நீங்கள் ஏன் கருணையாக இருக்கிறாள், ஏன் அனுக்கிரகம் செய்கிறாள், ஏன் அது மென்மையாக இருக்கிறது, எப்படி வலிமையாகவும் இருக்கிறது என்கிற ரகசியத்தை காமேஸ்வர தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதைஅவர் வெளிப்படுத்தவும் மாட்டார். எனவே, நீங்கள் சும்மா இருங்கள் என்று சொல்கிறது இந்த நாமம். உங்கள் மனம் எல்லாவற்றிற்கும் காரணம் கேட்கும். ஏதேனும் ஒன்றை கண்டுபிடித்து விட்டு குதிக்கும். ஆனால், அதனால் கண்டுபிடிக்க முடியாத அனேக விஷயங்கள் உள்ளன. எனவே, அமைதியாக இருந்தால் அம்பிகையின் அந்த ரகசியமும் உங்களுக்குள் பூவாக மலரும். அப்போது நீங்கள் எந்த காரணமும் தேட மாட்டீர்கள். அப்படியே அதுவாகவே நிற்பீர்கள்.

அந்த ரகசியத்தை விளக்க முடியாது. உங்கள் மனதை… தொடர்ந்து தொணதொணக்கும் உங்கள் மனதை சும்மாயிருக்கச் சொல்லும் சாவி இதில் உள்ளது. அதனாலேயே அந்த ரகசியத்தை அம்பிகையின் தொடைகளில் அமர்ந்து குழந்தைபோல் கேளுங்கள் என்று சொல்கிறது இந்த நாமம். இன்னொன்று கவனியுங்கள். தொடைகள் மென்மையாகவும் இருக்கும். வலிமையானதாகவும் இருக்கும். இந்த நாமம் என்ன சொல்கிறதெனில் தெரியாவிட்டாலும் நீங்கள் சும்மாதான் இருக்க வேண்டும். தெரிந்த பிறகும் நீங்கள் சும்மா இருப்பீர்கள். காமேஸ்வரரே சொல்லாமல் இருக்கும்போது நாம் எப்படி சொல்வது என்று சரணாகதியையே அதாவது அம்பிகையினுடைய பிரபாவத்தை வியப்போடு நோக்கி அடங்கி அமைதியாகி அது அப்படியே சரணாகதியை நோக்கி செல்ல வேண்டுமென்பதே இந்த நாமத்தின் மூல தாத்பரியமாகும். அறிய வேண்டுமெனில் அடங்க வேண்டும்.

தொணதொணக்கும் மனம் அடங்க வேண்டும். அடங்கினால் அறிவோம். அதை சொல்லவும் முடியாது. சதா சிவமாகும் நிலையாகும். அதி சூட்சுமமான நாமமான இதை உங்கள் உள்ளத்தில் ஊறப்போடுங்கள். எல்லாவற்றிற்கும் காரணம் கேட்கும் மனதை சும்மாயிருக்கச் சொல்லுங்கள். தானாக அம்பிகையின் கருணைக் கதவுகள் உங்களின் உள்ளக் கதவை திறக்கும். இதற்கான கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனே ஆகும். அம்பிகையின் பிரபாவத்தை விளக்க முடியாது என்று வசின்யாதி வாக் தேவதைகள் தவமிருக்கும் தலமும் இதுவே ஆகும்.

ரம்யா வாசுதேவன் அண்டு கிருஷ்ணா

The post வலிமையையும் மென்மையையும் சேர்ந்தளிக்கும் திருநாமம்! appeared first on Dinakaran.

Related Stories: