பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றி விடுவார்கள்

* இந்தி படித்தால் மட்டுமே நாட்டில் இருக்க முடியும் என்பார்கள்

* மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரசாரம்

சென்னை: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என்று மாற்றமடையும். இந்தி படித்தால் மட்டுமே நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்று பிரசாரத்தின் போது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநி திமாறன், அண்ணாநகர் தெற்கு பகுதி, வடக்கு பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, வில்சன் எம்பி, அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், பகுதி செயலாளர்கள் ச.பரமசிவம், மதன்மோகன், வினோத் வேலாயுதம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கார்த்திக் மோகன், அண்ணாநகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் பத்மபிரியா உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது வேட்பாளர் தயாநிதி மாறன் பேசியதாவது:

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். “இந்தியாவின் பெயர் ‘பாரத்’ என்று மாற்றமடையும், இந்தியன் கிரிக்கெட் அணி ‘பாரத் கிரிக்கெட்’ அணியாகும். அவர்களின் நீலநிற டி-சர்ட்டுகள் காவி நிறத்துக்கு மாற்றப்படும். இந்தியன் போலீஸ் சர்வீஸ் பாரத் போலீஸ் சர்வீசாகும். இதனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பொறுப்புகள் பிஏஎஸ், பிபிஎஸ் என்று அழைக்கப்படும்.
உணவு அரசியல் தலைதூக்கும். அசைவம் உண்போர்கள் மனதில் குற்ற உணர்ச்சியைப் புகுத்துவார்கள்.

குறிப்பிட்ட நாட்களில் அசைவம் உண்ணக் கூடாது என்று கட்டாயப்படுத்துவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மாநில கட்சிகளின் அதிகாரம் பறிக்கப்படும். பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நன்மையும் கிடைக்காது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வேலை வாய்ப்புகள் பறிபோகும். அனைத்து பணிகளிலும் வட மாநிலத்தவரே நிறைந்திருப்பார்கள். நாம் அவர்களோடு போட்டி போட வேண்டிய சூழல் உருவாகும். பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களை போட்டுக் கொள்ளும் பழைய வழக்கம் நடைமுறைக்கு வரும்.

இதன் மூலமாக சாதிய பிரிவினைகள் நிகழும். வன்முறைகள், கலவரங்கள் வரலாம். சாதியப் பாகுபாடு காரணமாகப் பிரிவினைப்படுத்தப்படுவார்கள். அம்பேத்கர் வகுத்த இந்திய அரசியல் சட்டம் மாற்றியமைக்கப்படும். சில கார்ப்பரேட்டுகளுக்காகவும், மதவாத அரசியலுக்காகவும் சட்டங்கள் திருத்தி எழுதப்படும். சிஏஏ போன்று இன்னும் பல சட்டங்கள் உருவாகும். இதனால் சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படும். நாடு முழுவதும் மதக் கலவரங்கள் உருவாகும்.

பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பறிபோகும், சர்வாதிகாரப் போக்குதான் நிகழும். மீறி கேள்வி கேட்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஈடி, சிபிஐ போன்றவைகள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் விலை கட்டாயம் 150 ரூபாயைத் தாண்டும், சிலிண்டர் விலை 1500 ரூபாயைத் தாண்டும், டாலர் விலை 100 ரூபாயைக் கடக்கும். விலைவாசி விண்ணைத் தொடுமளவுக்கு உயரும். இட ஒதுக்கீடு முறை முற்றிலுமாக அகற்றப்படும். நீட் போன்று அனைத்து படிப்புகளுக்கும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்.

அரசுக் கல்வி நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு தனியார் பள்ளிகளின் வருகை உயரும். இந்தி படித்தால் மட்டுமே நாட்டில் இருக்க முடியும் என்ற நிலை உருவாகும். குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்படும். இதனால் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். வேலை வாய்ப்பு அவர்களுக்கான சம உரிமை அனைத்தும் மறுக்கப்படும்.

சாதியின் அடிப்படையில் தொழில்கள் தீர்மானிக்கப்படும். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு தாரை வார்க்கப்படும். அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்கிவிடும். இவ்வாறு அவர் பேசினார். தயாநிதிமாறனுடன் அவரது மனைவி பிரியா மாறன், மகள் திவ்யா மாறன் ஆகியோரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுட்டனர். தந்தையுடன் மனைவி, மகள் ஆகியோர் பிரசாரம் செய்தது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றி விடுவார்கள் appeared first on Dinakaran.

Related Stories: