திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும்: இ.கருணாநிதி எம்எல்ஏ உறுதி

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, குரோம்பேட்டை பகுதியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை ரூ.132 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மாவட்ட மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. கட்டணமில்லா இலவச பேருந்து வசதி போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் புதுப்பித்து 40 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும். அதேபோல மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை திமுக அரசால் வழங்கப்பட்டது. ஆனால் மோடியோ, மோடியுடன் ரகசிய உறவு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியோ ரூ.100 கூட வழங்கவில்லை. எனவே, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னாட் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும்: இ.கருணாநிதி எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: