விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே மகாராஜபுரத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று  நடைபெற்றது. ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.  முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்துவது, என பல பிரிவுகளில் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் முதல் தவணையாக இதுவரை 79.14 சதவீதமும், 2வது தவணையாக 45.12 சதவீதம்பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உருமாறி, உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆல்டா, டெல்டா வரிசையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் வந்துள்ளது. தமிழகத்திற்கு, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், பன்னாட்டு விமான நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும், என்றார். வெளிநாடுகளிலிருந்து வந்து தொற்று உறுதியான 3 பேருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்புதான் உள்ளது. ஒமிக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும், தீவிர பரிசோதனை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த வைரஸ் தொற்று வந்தால் ஒரு நபரிடமிருந்து, 50 பேருக்கு வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது, என்றார்.தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும், என அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்டபோது, தடுப்பூசிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஐசிஎம்ஆர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில நாடுகளில் 3வது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி நடைமுறைக்கு வருவது குறித்து ஒன்றிய அரசுதான் முடிவு செய்ய வேண்டும், என்றார். …

The post விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: