இருப்பவல் திருப்புகழ்

[நெல் அவலும் சொல் அவலும்]

“பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்டநடை
பக்ஷி எனும் உக்ர துரகமும்
(நீபப்) பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்
திக்கதும் மதிக்கவரு குக்குடமும் ரக்ஷைதரு
சிற்றடியும் முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர்
(வண்) டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
(வெள) ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்
மிக்க அடிசில் கடலை பக்ஷணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருளாழி
வெற்ப குடிலச்சடில விற்பரமர் அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே’’
என்று பாடும் அருணகிரிநாதருக்கு, “திருப்புகழ் விருப்பமொடு செப்பு” எனக் கூறியருளியவர், நம் வயலூர்ப் பொய்யாக் கணபதி ஆவார்.
அன்று முதலாக முருகப் பெருமானைப் போற்றும் திருப்புகழ், கந்தர் அலங்காரம் – அநுபூதி – அந்தாதி, வேல் – மயில் – சேவல் விருத்தங்கள், திருவகுப்புகள், திரு எழுகூற்றிருக்கை ஆகிய நவமணி நூல்களை இயற்றியருளிய பெருந்தகை
அருணகிரியார். இந்த நூல்களின் தொகுப்பு இன்று பொதுவாக ‘திருப்புகழ்’ என்ற பெயராலேயே அறியப்படுகிறது.
“(பூர்வ) பச்சிம தட்சிண உத்தர திக்குள
பத்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த
(தி)ருப்புகழைச் சிறி(து) அடியேனும்
செப்பென வைத்துலகில் பரவத்
(தெரி) சித்த அநுக்ரக மறவேனே’’
– என்று தன் வாழ்நாளிலேயே திருப்புகழின் பெருமை நாற்றிசைகளிலும் பரவி நின்றது பற்றித் தாமே குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
“ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ
டேறலாம் யானைக்கிளையான் திருப்புகழைக்
கூறினார்க்காமே இக்கூறு”
– என்பது புராணப் பிரதிகளில் எழுதி வழங்கிவரும் சிறப்புப் பாயிரம்.
இத்தகு பெருமைமிக்க இன்ப ரசத்தை, திருத்தணிப் பாடலில் “இருப்பவல் திருப்புகழ்” என்று கையிருப்பாக வைத்திருக்கும் எளிய உணவாகிய அவலுக்கு
ஒப்பிட்டுக் கூறுகிறார், அருணை முனிவர்.
“இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் என ஓதும்
இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ’’
– என்பது பாடலின் முதற்பகுதி.
“பிரயாணத்தில் கையிருப்பாக வைத்திருக்கும் உணவான அவல் போன்ற உனது திருப்புகழானது தன்னை விருப்புடன் படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்து ஒழிக்கும் எனும் உண்மையை எடுத்துக் கூறுகின்ற இசைத் தமிழ், நாடகத் தமிழ், அகப் பொருள் துறை எனும் வகையில், இலக்கண – இலக்கிய நயத்துடன் கூடிய ஆசு – சித்ரம் – மதுரம் – வித்தாரம் எனும் நால்வகைக் கவிகளையும் உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய அடியார்களைப் புகழாமல் பொது மாதர்கள் மயக்கினில் நான் விழலாமோ? (விழக்கூடாது)” என்கிறார்.பண்டைய காலத்தில் நீண்ட யாத்திரை செய்பவர்கள், அவலைக் கையிருப்பாகத் துணியில் முடிந்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ‘பெருங்கதை’ எனும் நூல், அவலை ‘ஆத்திரைத் தருப்பணம்’ என்று குறிப்பிடுகிறது. [ஆத்திரை – யாத்திரை]. அவலைச் சுடு நீரிலிட்டுப் பக்குவப்படுத்தி உப்பு, புளி, வெல்லம், பால் அல்லது மோர் இவற்றுடன் தனித்தனியே சேர்த்து உண்ணலாம். காய்கறிகளுடன் கலந்து உண்ணலாம். கிருஷ்ண பரமாத்மாவைச் சந்திக்கச் சென்றபோது, குசேலர் அவலைத் தானே எடுத்துக்கொண்டு போனார்! உயிர் போம் அத் தனிவழிக்கு, நீண்ட அப்பயணத்திற்கு, அவல் போல் கையிருப்பாக இருந்து உதவுவது திருப்புகழ்; எனவேதான் அருணகிரியார் ‘இருப்பவல் திருப்புகழ்’ என்கிறார். திரு.கி.வா.ஜ அவர்கள், “குசேலர் அன்று அளித்தது ‘நெல் அவல்’; அருணகிரிநாதர் நமக்கு அளித்திருப்பது ‘சொல் அவல்’” என்று சுவைபடக் கூறுகிறார்! இருப்பவலாகிய திருப்புகழைச் ‘சொல் அவல்’ என்று கூறுவது எவ்வாறு பொருந்துகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். ஆதி சங்கரர், இறைவனைச் சென்றடைய அருளிச்செய்த ஆறு மார்க்கங்களிலுமே, சஞ்சரித்துள்ளார் அருணகிரிநாதர்.

1. காணாபத்யம் [விநாயகர்]
“கடலை பொரி அவரை பல கனி கழை நுகர்
கடின குட உதர விபரீத
கரட தட மும்மத நளின சிறுநயன
கரிணிமுகவர் [கடலை பொரி]
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம்
கனி கிழங்கு இக்குச் சர்க்கரை முக்கண்
கடலை கண்டு அப்பிப் பிட்டொடு மொக்கும் திருவாயன்
கவள துங்கக்கைக் கற்பக முக்கண்
திகழும் நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற் புகர் வெற்பன்’’
[புனமடந்தை]
2. கௌமாரம் [குமரன்]
அருணகிரியாரின் அனைத்துப் பாக்களுமே முருகனைப் போற்றுவதாகவும், அவனிடம் மட்டுமே வரம் கேட்பதாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
3. சைவம் [சிவபெருமான்]
“கரிபுராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலையாளி காபாலி கழையோனி
கரவுதாசனாசாரி பரசுபாணி பானாளி
கணமொடாடி காயோகி சிவயோகி
பரமயோகி மாயோகி பரி அரா ஜடாசூடி
பகரொணாத மாஞானி பசு ஏறி
பரதம் ஆடி கானாடி பர வயோதிகாதீத’’
[கரிபுராரி]
4. வைணவம் [திருமால்]
“சுவடு பார்த்தட வரு கராத்தலை
தூளாமாறே தான் ஆ நாராயணனே நல்
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப
துழாய்மார்பா கோபாலா காவாய் எனவே கைக்
குவடு கூப்பிட உவண மேல் கன
கோடூதா வானே போதாள்வான்
[கவடு கோத்தெழும்]
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம
இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர்சூடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வருமாயன்’’
[தொந்தி சரிய]
5. சாக்தம் [அம்பிகை]
இறைவன் இறைவியரின் நாமங்
களைப் பாடுவது கலியுகத்தில் முத்திவீடடைய வழி என்பர் ஆன்றோர். சக்தி வழிபாட்டிற்கான நாமங்களைப் பல்வேறு விதமாகப் பாடியுள்ளார் அருணகிரியார்.
“குமரி காளி வராகி மகேசுரி
கவுரி மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளுரூப முராரி சகோதரி
உலகதாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரிதன் நாயகி
மலைகுமாரி கபாலி நல் நாரணி
சலில மாரி சிவாய மனோகரி பரையோகி
சவுரி வீரி முநீர் விடபோஜனி
திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
சகல வேதமும் ஆயின தாய் உமை’’
[அமுதம் ஊறு]
6. சௌரம் [சூரியன்]
சூரியனின்றி இப்பிரபஞ்சம் இயங்காது. பிரதியட்ச தெய்வமாக விளங்குபவன் சூரியன். ஆணவ இருளை நீக்கும் ஞான சூரியனாக முருகனைப் போற்றுகிறார்.
“திமிர மாமன மாமட மடமையேன் இடர் ஆணவ
திமிரமே அரி சூரிய திரிலோக தினகரா
[திமிர மாமன]
உததியிடை கடவு மரகத வருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயமென’’
[சீர்பாத வகுப்பு]
இவ்வாறாக, விநாயக சதுர்த்தி, கந்த சஷ்டி, சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, நவராத்திரி, ரதசப்தமி போன்ற எண்ணற்ற விசேஷ நாட்களில் இறைவனைப் போற்றுவதற்குக் கையிருப்பாக நமக்கு அருணகிரியார் அளித்துச் சென்றிருக்கும் திருப்புகழ்ப் பாக்களைச் ‘சொல் அவல்’ என்று கூறுவது பொருத்தம் தானே! திருப்புகழை ‘இருப்பவல்’ என்றும் ‘சொல் அவல்’ என்றும் கூறுவதற்கான காரணங்களை வேறு சில கோணங்களிலும் ஆராயலாம். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் தீவிர சைவர்கள்; சிவனைப் போற்றி மகிழ்ந்தனர். ஆனால், அவர்கள் பயணித்த பாதைகள் வெவ்வேறாக இருந்தன. சம்பந்தப் பெருமான், சிவனாரைத் தந்தையாகவும், சுந்தரர் தன் தோழராகவும், அப்பர் பெருமான் தன்னை அவர்தம் அடிமையாகவும், மாணிக்கவாசகர் அவரைத் தம் குருநாதராகவும் பாவித்துப் பாடியுள்ளனர். அருணகிரியாரோ இவ்வனைத்து உறவுகளையும் உள்ளமைத்துத் தம் பாக்களைப் பாடியுள்ளார் என்பதை பின் வரும் ஒருசில உதாரணங்கள் மூலம் உணரலாம்.
“எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ” [கந்தர் அநுபூதி]
“எனக்கு நீ தந்தை தாய் என்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ” [ஏது புத்தி]
எனும் வரிகளில் முருகப்
பெருமானைத் தாய் – தந்தையாகப் பாவிக்கிறார்.
“பாதமலர் மீதில் போதமலர் தூவிப் பாடும் அவர் தோழர் தம்பிரானே” [பேதகவிரோத]
“எமக்கமிர்த தோழா” [நாடா பிறப்பு]
“ஆசைகூரு நண்ப” [தாரகாசுரன் சரிந்து]
எனும் போது, முருகனைத் தோழனாகக் காண்கிறார்.
“வழியடிமை அன்பு கூருமது சிந்தியேனோ” [உததியறல்]
“முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை
முழுதுலகறிய மழலை மொழிகொடு பாடும் ஆசுகவி” [சீர்பாத வகுப்பு]
என்று கூறும் பாக்களில் முருகனது அடிமையாகத் தன்னைக் கூறிக்கொள்கிறார். முருகனைக் குருநாதனாகப் போற்றும் பொழுது, மாணிக்கவாசகரை நினைவூட்டுகிறார்.“கொந்துவார் குரவடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய குருநாதா” [கொந்துவார்]“இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி” [இறவாமல்] ஏன், வேத சாரமாகிய கந்தர் அநுபூதியை, “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்றுதானே நிறைவுசெய்கிறார்!
‘எம் தாதை சதாசிவ கோத்திரன் அருள் பாலா’ என்று பாடுகையில் தம்மை சதாசிவக் கோத்திரன் என்றும், முருகனும் விநாயகனும் தம் சகோதரர்கள் என்றும் கூறுகிறாரோ என்று எண்ணத்
தோன்றுகிறது!
“செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடி மீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்”
என்று சுவாமிமலைத் திருப்புகழில் கேட்கும்பொழுது நாமும் முருகனை நம் குழந்தையாக உணர்ந்து மகிழலாம்.

சித்ரா மூர்த்தி

The post இருப்பவல் திருப்புகழ் appeared first on Dinakaran.

Related Stories: