ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இன்று நடந்த ஆட்டு சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்போர் தங்களது ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனை வாங்குவதற்காக திருச்சி, சேலம், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் செல்வார்கள்.

நாளை ரம்ஜான் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆடு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆட்டின் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் விற்பனையானது. அதிகாலை முதல் நடைபெற்று வந்த இந்த ஆடு சந்தையில் இதுவரை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்த விதிமுறைகள் உள்ளதால் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் பணம் எடுத்து வர முடியாத சூழ்நிலையில் கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகளை வாங்கிச் செல்வதற்கு மினி டெம்போ, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து வந்ததால் உளுந்தூர்பேட்டை சேலம் நெடுஞ்சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசலோடு காணப்பட்டது.

The post ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: