நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல் பா.ஜ வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி மனு

சென்னை : நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவர் தொடர்புடைய அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும். மேலும் பாஜ வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை கொண்டு வந்த சதீஸ் மற்றும் 2 நபர்கள் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் மேலாளராகப் பணி புரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் பணத்தை வைத்து அங்கு இருந்து நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பணம் விநியோகம் செய்கின்றனர்.

மேலும் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார், அதேபோல் பாஜவும் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

எனவே நயினார் நாகேந்திரன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும். மேலும் பாஜ வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post நயினார் நாகேந்திரனின் ரூ.4 கோடி பறிமுதல் பா.ஜ வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் சோதனை: தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர்.எஸ்.பாரதி மனு appeared first on Dinakaran.

Related Stories: