நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள்; 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?- மோடியின் கருத்துக்கு கார்கே காரசாரமான பதில்

புதுடெல்லி: நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள். உங்களது ஆட்சி காலத்தில் 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பத்திரிகையாளர்களை ஏன் சந்தித்தனர்? என்று கேள்வி எழுப்பிய கார்கே, மோடியின் கருத்துக்கு காரசாரமான பதில் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் உள்பட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.

‘நீதித்துறைக்கு அச்சுறுத்தல்- அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தத்தில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பிலான கடிதத்தில், ‘அரசியல் வழக்குகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் வழக்குகளை கையாள்கிறபோது அதிகப்படியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த வியூகங்களால் நீதிமன்றங்களுக்கும் நம் ஜனநாயக முறைக்கும் அச்சுறுசத்தல் ஏற்படுகிறது’ என்ற அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் நகலை மேற்கோளிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘அடுத்தவர்களை பலவீனப்படுத்துவதும் கடுஞ்சொற்களால் விமர்சிப்பதும்தான் காங்கிரசின் பாரம்பரியம். 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உறுதியான நீதித்துறை வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தங்களின் சுயலாபத்துக்காக அடுத்தவர்களின் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் காங்கிரஸ் கட்சி, நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதில்லை. அக்கட்சியை 140 கோடி மக்களும் நிராகரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட பதிவில், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்தானது, அவரது பாசாங்குத்தனத்தின் உச்சம். கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சி காலத்தில், உண்மைக்கு மாறான விஷயங்களைத் திரித்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிடுவதே அவர்களின் வேலையாக இருந்தது. மோடி அவர்களே! நீங்கள் நீதித்துறையைப் பற்றி பேசுகிறீர்கள். உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊடகங்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள், ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருவதாக எச்சரித்தனர். அப்போது உங்களது ஆட்சி தான் நடந்தது. இதையெல்லாம் எளிதாக நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரை ராஜ்யசபாவுக்கு உங்களது அரசு பரிந்துரைத்தது. எனவே பலமான நீதித்துறை யாருக்கு வேண்டும்? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் உங்களது கட்சியின் சார்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர், மேற்குவங்கத்தில் போட்டியிடுகிறார் என்பதை மறந்துவிட்டீர்களா? அவருக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது?

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தது யார்? அதனை உச்சநீதிமன்றம் ஏன் தடை செய்தது? மோடி அவர்களே, நீங்கள் தன்னாட்சி அமைப்புகளை உங்களிடம் சரணடையுமாறு மிரட்டுகிறீர்கள். உண்மையில் நீங்கள், நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து அரசியல் சட்டத்தை புண்படுத்தும் கலையில் வல்லவர். நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரஸ் கட்சியைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

The post நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள்; 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?- மோடியின் கருத்துக்கு கார்கே காரசாரமான பதில் appeared first on Dinakaran.

Related Stories: