தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

சென்னை: தென்சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள், என்று பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தில் பேசினார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மேற்கு மாம்பலம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பில் சென்று தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அவருடன் பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக சென்று அவருக்கு ஆதரவு திரட்டினர்.

மக்களோடு மக்களாக நின்று அவர்களுடன் உணவருந்தி தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. பதவியை மட்டுமே நினைத்து இருந்தால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்திருப்பேனா. நான் மக்கள் சேவையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே, உங்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன். இந்த தொகுதியை பொறுத்தவரை இன்னும் ஏராளமான வளர்ச்சி தேவைப்படுகிறது.

முற்றிலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றி காட்டவே வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். உங்களோடு நின்று உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். இந்த தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளோம். அதை நிறைவேற்றி காட்டுவேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மக்களின் தேவைகளை அறிந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். நல்லதொரு மாற்றத்தை நிச்சயமாக தருவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: