குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை

திருவொற்றியூர்: மணலி புதுநகர் விச்சூரில் தமிழக அரசின் மானியத்துடன் வழங்கக்கூடிய லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயில் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சென்னை மண்டல காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், சென்னை சரக காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத் தலைமையிலான தனிப்படை போலீசார் வீச்சூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விச்சூர் கிராமம், எஸ்.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு ஆயில் குடோனில் இருந்த பேரல்களில் சுமார் 4 லட்சத்து 38 ஆயிரம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சக்திவேல், பாஸ்கர், பழனிச்சாமி ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். அப்போது குடோன் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் ஸ்ரீ சத்யசாய் லூப்ரிகன் என்ற ஆயில் நிறுவனத்தை கோயம்புத்தூரில் நடத்தி வருவதாகவும், விச்சூர் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் கருப்பு ஆயிலை அதிகளவில் பதுக்கி வைத்து அதை சட்டவிரோதமாக லாரிகள் மூலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அந்த ஆயிலை பேரல்களில் நிரப்பி, பின்னர் பேரல் பேரலாக விற்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கருப்பு ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் பணிபுரிந்த 3 ஊழியர்களை கைது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர்கள் ரமேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: