சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்களை புதிய அரசு விருந்தினர் மாளிகையில், பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம், என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலைக்குழு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் சந்திக்கும் வகையில் தேர்தல் பொது பார்வையாளர்களின் செல்போன் எண், சந்திக்கும் இடம் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி (திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள்) தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் செல்போன் எண். 94459 10953. இவரை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகை கூட்டரங்கத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்திக்கலாம்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி (வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள்) தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் டி.சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் செல்போன் எண். 94459 10956. இவரை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகை கூட்டரங்கத்தில் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சந்திக்லாம்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி (விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள்) தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் செல்போன் எண். 94459 10957. இவரை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகை கூட்டரங்கத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சந்திக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: