தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய சுயேச்சைகள் என 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 664 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை வாபஸ் பெற நாளை மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. இதையடுத்து நாளை மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம்தேதி தொடங்கி 27ம் தேதியுடன் (நேற்று முன்தினம்) முடிவடைந்தது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் போட்டி போட்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர்.

ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் முடிந்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை வரை 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1,487 ஆண்கள், 233 பேர் பெண் வேட்பாளர்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 72 பேரும், குறைந்தபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 12 பேரும், பெண்கள் 10 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீது நேற்று காலை 11 மணி முதல் பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் மேற்பார்வையில் தொகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர்கள் தங்கள் சார்பாக வழக்கறிஞர்களுடன் பங்கேற்றனர். முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மற்றும் உரிய நபர்கள் முன்மொழியப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் மீதும் எதிர்ப்பு தெரிவித்ததால் பலரது மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டன.

குறிப்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரது மனுக்களை ஏற்க கூடாது என பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. வேட்புமனு பரிசீலனை நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது. அதில், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதை தொடர்ந்து, வேட்புமனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30ம்தேதி (சனி) மாலை 3 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. இன்று அரசு விடுமுறை (பெரிய வெள்ளி) என்பதால் வாபஸ் வாங்க முடியாது. நாளை (சனி) மாலை 3 மணி வரை வாபஸ் வாங்கலாம். இதையடுத்து நாளை மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனையும் முடிந்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: