கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா விமர்சித்த நிலையில், தற்போது காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதற்கு, ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம் கூறியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு நேற்று சம்மன் அனுப்பி அழைத்து பேசியது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இந்த பேச்சு இருந்தது. அதற்கு முன்னதாக கெஜ்ரிவாலின் கைது தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட கருத்துக்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கும் சம்மன் அனுப்பியது.

இதனிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற கருத்துகள் எங்களுடைய நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும், எங்களின் சுதந்திரமான நீதித்துறையினை குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா வலிமையான மற்றும் துடிப்பான சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட ஜனநாயக நாடு. எனவே இதுபோன்ற ஒருதலைபட்சமான கருத்துகள் தேவையற்றது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்கா, தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘ஒவ்வொரு பிரச்னைக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான சட்ட நடைமுறைகளை அமெரிக்கா ஊக்குவிக்கும்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அறிவோம். இதுபோன்ற சிக்கலான விசயங்களில் தூதரக ரீதியாக கருத்துகளை கூறவில்லை. நாங்கள் எதிர்க்கிறோம் என்று எண்ண வேண்டாம்’ என்றார். கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய வெளியுறவு துறை கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: