சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சேலம்: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் சென்னையில் இருந்து மும்பை செல்லும் லாரிக்கு கூடுதலாக ₹1000 செலவாகும். எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 566 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 55 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், ஏப்ரல் 1ம் தேதி மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கக்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி மூலம் ₹34 ஆயிரத்து 525 கோடி கட்டணம் வசூலாகிறது. இதில் பாஸ்டேக் மூலம் மட்டும் 33 ஆயிரத்து 274 கோடி ரூபாய் கட்டணம் கிடைக்கிறது. தற்போது 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது. தற்போது 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்துவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டணம் அமலுக்கு வரும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு லாரி ஒன்றுக்கு கூடுதலாக ₹1000 கட்டணம் செலவாகும். டீசல் விலை உயர்வால் ஏற்கனவே லாரி தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், ஒன்றிய அரசு டீசல் விலையை குறைக்கவில்லை.

பல ஆண்டுகளாக சுங்கச்சாவடிகளுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரவேண்டும் என்றும், மேலும் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடி மற்றும் சென்னை பரனூர் உள்பட 5 காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். எங்கள் குமுறலுக்கு ஒன்றிய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. தமிழகத்தில் 60 கிலோமீட்டருக்குள் 33 சுங்கச்சாவடிகள் உள்ளது. அவற்றை அகற்ற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கக்கட்டணம் உயர்வால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தனராஜ் கூறினார்.

The post சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: