நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!

கோவை : தேர்தல் விதிகளுக்கு மாறாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி, விதிகளை மீறி வேட்புமனுவை ஏற்றதாக தேர்தல் அதிகாரி மீது அதிமுக புகார் அளித்துள்ளது. கோவை மக்களவை தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.இந்த நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக அதிமுக புகாரில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி ஆகும். ஆகவே நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தி உள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக வேட்புமனு பரிசீலனையின்போதே அண்ணாமலையின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, நாதக உட்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஆட்சேபம் தெரிவித்தபோதும் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டது.

இதையடுத்து கோவை தேர்தல் அதிகாரியான ஆட்சியர், அடிப்படை அம்சங்களை பரிசீலிக்காமல் அவசரமாக அண்ணாமலை மனுவை ஏற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதற்கிடையில் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒருவேளை அண்ணாமலை வென்றாலும் நீதிமன்ற முத்திரைத்தாளில் -பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததால் வெற்றி செல்லாது என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்த பிற வேட்பாளர்கள் அனைவருமே பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாளையே பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் அளித்த பேட்டியில்,””Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்கான, ‘India Court Fee’ பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. IIM-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: