×

மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகள் விறுவிறு வாக்குசேகரிப்பு: வட சென்னையில் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சேகர்பாபு பரப்புரை

சென்னை: மக்களவை தேர்தலுக்கு மனுதாக்கல் நிறைவடைந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் சேகர்பாபு பரப்புரை மேற்கொண்டார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், கவுதமபுரத்தில் மேயர் பிரியா மற்றும் கூட்டணி கட்சிகளுடன் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் தோல்வி பயத்தில் திமுக மீது அவதூறு பரப்புவதாக விமர்சனம் செய்தார். கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கோடங்கிபட்டி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். கோடங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.44 கோடியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க திட்டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதற்கான நகலை காட்டியபடி ஜோதிமணி வாக்கு சேகரித்தார். நாகையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து நாகை நகராட்சிக்கு உட்பட்ட மேலக்கோட்டை அக்கரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் பெயரை சுர்ஜித் சிங் என அவர் தவறாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய சுர்ஜித் குமார் தாம் வெற்றிபெற்றால் நாகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் நாகையில் இருந்து சிங்கப்பூருக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து வாக்கு திரட்டினார்.

தென் சென்னை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து கோடம்பாக்கம் வந்த அவரை பாஜக தொண்டர்கள் சங்கு ஊதி வரவேற்றனர். பரப்புரையின் போது தொண்டர் ஒருவர் தமிழிசைக்கு தாமரை மொட்டை பரிசாக அளித்தார். அதை அவர் தட்டி தட்டி மலர செய்து பொதுமக்களிடம் காட்டி தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அங்கிருந்த உணவகத்தில் மக்களுடன் சேர்ந்து இட்லீ, வடை சாப்பிட்டபடி அவர் பரப்புரை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்ற அவர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.

The post மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகள் விறுவிறு வாக்குசேகரிப்பு: வட சென்னையில் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சேகர்பாபு பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Shekharbabu ,Kalanidhi Veeraswamy ,North Chennai ,CHENNAI ,Lok Sabha ,Minister ,Kalanithi Veerasamy ,DMK ,Kolathur ,Kalanidhi Veerasamy ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு