×

மக்கள் பணியாற்றுவதற்காக எம்எல்ஏ அலுவலகங்களை திறந்து விட வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்

சென்னை: தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை திறக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிற்கு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர். 18வது மக்களவையை தேர்ந்தெடுக்க தற்போது தேர்தல் நடந்து வருகிறது. ஏப்.19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கான அட்டவணை கடந்த மார்ச் 16ம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

அதன்படி, எம்எல்ஏக்கள் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் பூட்டப்பட்டன. அதேபோல், கட்சி சுவர் விளம்பரம், அரசியல் தலைவர்களின் சிலை உள்ளிட்டவை தேர்தல் விதி காரணமாக அழிக்கப்பட்டும், மூடப்பட்டும் இருந்தன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும், ஆனால் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில், எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன, இவை தவிர நகராட்சி தலைவர் அலுவலகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கிறது. தற்போது தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்றுவதற்காக எம்எல்ஏ அலுவலகங்களை திறந்து விட வேண்டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மக்கள் பணியாற்றுவதற்காக எம்எல்ஏ அலுவலகங்களை திறந்து விட வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chief Electoral Officer ,CHENNAI ,Satya Pratha Chagu ,Tamil Nadu ,18th ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...