×

நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல் 88 தொகுதிகளில் 61% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல் 88 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. அங்கு 61 சதவீத வாக்குகள் பதிவானது. 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கியது. ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 2ம் கட்ட தேர்தல் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று நடந்தது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளில் ேதர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

குறிப்பாக கேரளா, கர்நாடகா, மணிப்பூர், திரிபுரா உள்ளிடட மாநிலங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் காலையிலேயே வாக்களிக்க திரண்டனர். இதனால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலை மோதியது. மேற்குவங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் சில பூத்களில் இவிஎம் எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. ராஜஸ்தானின் பார்மர்-ஜெய்சல்மார் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஓரிரு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் போலி வாக்குப்பதிவு தொடர்பான புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்போசிஸ் நாராயண மூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தி எம்பி, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்தனர். இதே போல் ராஜஸ்தானில் உள்ள 13 தொகுதிகள், உபியில் 8 தொகுதிகள், ஐம்முவில் ஒரு தொகுதி, அசாமில் 5 தொகுதி, மேற்குவங்கத்தில் 3, பீகாரில் 5, மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. சட்டீஸ்கரில் நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள காங்கர், ராஜ்நந்த்கான், மகாசமுந்த் தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்திரி, ராஜீவ் சந்திரசேகர், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரின் தொகுதிகளிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பூத்களில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இறுதியில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. 3ம் கட்ட தேர்தல் மே 7ம் தேதி நடக்கிறது. 7 கட்ட தேர்தல் முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்.

இதுவரை தேர்தல் முடிந்த மாநிலங்கள்
தமிழ்நாடு 39
உத்தரகாண்ட் 5
அருணாச்சல் 2
மேகாலயா 2
அந்தமான் 1
மிசோரம் 1
நாகாலாந்து 1
புதுவை 1
சிக்கிம் 1
லட்சத்தீவு 1
கேரளா 20
ராஜஸ்தான் 25 (2கட்டம்)
திரிபுரா 2 (2 கட்டம்)

* கர்நாடகாவில் ஆர்வமுடன் வாக்களித்த நடிகர், நடிகைகள்
கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ், தர்சன், நடிகர் சந்துரு, உபேந்திரா, கிச்சா சுதீப், கணேஷ், ஷில்பா கணேஷ், ராகவேந்திரா ராஜ்குமார், யுவா, வினய் ராஜக்குமார், புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி, நடிகர் யாஷ், துரவ் சர்ஜா, ரிஷப் ஷெட்டி, ரக்‌ஷித் ஷெட்டி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

* மணிப்பூரில் வாக்காளர்களை மிரட்டும் பா.ஜ
மணிப்பூரில் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்களிக்க வந்த வாக்காளர்களை பா.ஜவினர் மிரட்டும் வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது. மணிப்பூர் தேர்தலில் பா.ஜ. கூட்டணி கட்சியான என்பிஎப்க்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென அவர்கள் மிரட்டப்பட்டனர். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது இணையதளத்தில் பதிவிட்டு இருந்தது.

* இவிஎம் இயந்திரங்கள் உடைப்பு
மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ராம்புரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த 26 வயது இளைஞர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புப் பொருளால் தாக்கி சேதப்படுத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் எந்திரத்தை மாற்றி புதிதாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதே போல் கர்நாடகா மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள இண்டிகநாத கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இவிஎம் மிஷின்கள் உடைக்கப்பட்டன. அங்குள்ள மக்கள் இருகுழுக்களாக பிரிந்து மோதியதில் இந்த சம்பவம் நடந்தது. வாக்குச் சாவடி அதிகாரிகள் தப்பியோடியதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* அசாமில் 7 ரயில்கள் ரத்து
அசாம் மாநிலத்தில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் திடீரென அங்கு செல்லும் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சரக்கு ரயில் தடம் புரண்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க செல்ல முடியாமல் திண்டாடினார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். அவர்களை மாற்று ஏற்பாடு செய்து வாக்களிக்க வைக்கும்படி அனைத்து அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

* 5ம் கட்ட தேர்தலுக்கு மனுத்தாக்கல் தொடக்கம்
மக்களவை தேர்தல் 5ம் கட்டமாக 8 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் மே 20ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 5ம் கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மே 3ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள். மே 4ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மே 6ம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தேர்தல் புறக்கணிப்பு
உத்தரபிரதேசத்தின் மதுரா, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மற்றும் மகாராஷ்டிராவின் பர்பானி ஆகிய சில கிராமங்களில் பல்வேறு பிரச்சனைகளுக்காக வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

* 7 பேர் பலி
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வாக்களித்த பின் 3 பேரும், ஆலப்புழா, மலப்புரத்தில் தலா ஒருவர் இறந்தனர். கோழிக்கோடு வாக்குச்சாவடியில் விழுந்து ஒரு வாக்குச்சாவடி முகவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டீஸ்கரில் காரியாபந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்தியப் பிரதேச சிறப்பு ஆயுதப் படையைச் சேர்ந்த ஜவான் ஒருவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* ஓட்டு போட்டால் இலவச உணவு
பெங்களூருவில் உள்ள பல்வேறு உணவகங்கள் வாக்களிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தோசை, லட்டு, காபி மற்றும் இதர உணவுப் பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்கின.

* கேரளாவில் வாக்களித்த பிரபலங்கள்
கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே பினராயி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மனைவி கமலா விஜயன், மகள் வீணா விஜயன் ஆகியோருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார். வீட்டில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் நடந்து சென்றார். மேற்குவங்க மாநில கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் வட்டியூர்க்காவில் ஒரு தனியார் பள்ளியிலும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர், தாய் லில்லி தரூருடன் வழுதக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். பிரபல நடிகர் மம்மூட்டி தனது மனைவி சுல்பத்துடன் கொச்சி பொன்னுருண்ணியில் ஓட்டு போட்டார். பகத் பாசில் தன்னுடைய தந்தையும், இயக்குனருமான பாசிலுடன் ஆலப்புழாவில் வாக்களித்தார். நடிகர்கள் டொவினோ தாமஸ் இரிஞ்சாலக்குடாவிலும், சுரேஷ் கோபி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சூர் மண்ணுத்தியிலும் ஓட்டு போட்டனர்.

* காங்கிரசுக்கு போட்ட ஓட்டு பாஜவுக்கு விழுந்ததா?
பத்தனம்திட்டா தொகுதியிலுள்ள கும்பழாவில் நேற்று மதியம் ஒரு பெண் ஓட்டு போடுவதற்காக வந்தார். அப்போது அவர், தான் காங்கிரசுக்கு வாக்களித்ததாகவும்,ஆனால் பாஜவுக்கு ஓட்டு போட்டதாக ஒப்புகை சீட்டு வந்தது என்றும் வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் புகார் கூறினார். தொடர்ந்து அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேறு வாக்காளர்களின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சரியாகத்தான் வாக்குகள் பதிவாவதாக கூறிய அதிகாரிகள், புகாரில் எந்த உண்மையையும் இல்லை என்று கூறினர்.

The post நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல் 88 தொகுதிகளில் 61% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,New Delhi ,18th Lok Sabha election ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...