×

தேர்தலில் வைக்கப்பட்ட மை 9 ஆண்டு ஆகியும் அழியவில்லை: கேரள பெண்ணின் விநோத சோகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு பெண்ணுக்கு தேர்தலின்போது விரலில் வைக்கப்பட்ட மை, 9 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருப்பதால், எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாமல் அவர் பரிதவித்து வந்தார். கடைசியாக நேற்று நடந்த மக்களவை தேர்தலின்போது தான் ஒருவழியாக அவர் வாக்களித்தார். கேரள மாநிலம் ஷொர்னூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் உஷா (62). இவர் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்களித்தார். அப்போது அவரது இடது கை, ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. அழியாத மை என்றாலும் ஓரிரு மாதங்களில் அது தானாக அழிந்துவிடும். ஆனால் உஷாவின் விவகாரம் வேறு மாதிரி ஆகிவிட்டது.

அவரது விரலில் வைக்கப்பட்ட மை அழியவே இல்லை. ஓராண்டு ஈராண்டு அல்ல.. 9 ஆண்டுகள் ஆகியும், இப்போது வரை அழியாமல் அப்படியே உள்ளது. இதனால் 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் இவரால் வாக்களிக்க முடியவில்லை. ‘இது 2016ம் ஆண்டு வைத்த மை. எனக்கு மட்டும் அழியவே இல்லை’ என எத்தனை எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் ேகட்கவில்லை. இந்த மக்களவைத் தேர்தலிலாவது வாக்களிக்கும் என் உரிமையை நிலைநாட்ட செய்யுங்கள் என புகார் அளித்தார். இந்த முறை எப்படியும் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.

இதற்கிடையில், ‘மை அழியா விநோதம்’ செய்தி பரவி, உஷா பிரபலமாகி விட்டார். இம்முறை கலெக்டரே நேரில் தலையிட்டு அவர் வாக்களிக்க ஏற்பாடு செய்தார். பாலக்காடு தொகுதியில் நேற்று உஷா வாக்களித்தார். அழியாத மை வைத்த அதே விரலில் நேற்றும் அவருக்கு மை வைக்கப்பட்டது. அடுத்த தேர்தலுக்குள் இந்த மையாவது அழிய வேண்டுமே என்பது தான் உஷாவின் தற்போதைய கவலையாக உள்ளது.

The post தேர்தலில் வைக்கப்பட்ட மை 9 ஆண்டு ஆகியும் அழியவில்லை: கேரள பெண்ணின் விநோத சோகம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Lok Sabha elections ,
× RELATED கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!!