×

மக்களவைத் தேர்தல்… தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு; நாகையில் குறைந்தபட்ச வேட்பாளர்கள்!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளில் 1437 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இதன்மூலம் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இதில் திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சனி, ஞாயிறு விடுமுறையை தவிர்த்து கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புதுவையில் 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் 70க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் இடத்தில் வட சென்னை தொகுதியில் 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதியில் 18 பேர் 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.30ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தல்… தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு; நாகையில் குறைந்தபட்ச வேட்பாளர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Karur ,Tamil Nadu ,Naga ,Chennai ,Puducherry ,Dinakaran ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...