அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

இடப்பாகம் கலந்த பொன்னே!

“செப்பும்‌ கனக கலசமும்‌ போலும்‌ திருமுலைமேல்‌
அப்பும்‌ களப அபிராமவல்லி! அணிதரளக்‌
கொப்பும்‌ வயிரக்‌ குழையும்‌, விழியின்‌ கொழுங்கடையும்‌,
துப்பும்‌ நிலவும்‌ எழுதிவைத்தேன்‌ என்‌ துணைவிழிக்கே’’.
– எழுபத்தி எட்டாவது அந்தாதி “ஆதியாக”

எண்ணங்களையே மூலதனமாக்கி அதை ஒருங்கிணைப்பதையே மனதினால் செய்யும் வேலையாக கொண்டு இறையருளை எளிமையான வழியில் குறைந்த முயற்சியில் அதிக பயனைப் பெற தியானமே உயர்ந்த சாதனம். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்பாடலின் மூலம் செயல்முறையில் விளக்கியுள்ளார், அபிராமிபட்டர். அதையே நாம் செய்ய முயல்வோம். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதிப் பொருட்சொல் வரிசை”

* செப்பும்
* கனக கலசமும் போலும்
* திருமுலை மேல் அப்பும் களப
* அபிராம வல்லி
* அணி தளரக் கொப்பும்
* வயிரக் குழையும்
* விழியின் கொழுங்கடையும்
* துப்பும்
* நிலவும்
* எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே இவ்வரிசையின்படி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“செப்பும்” சைவ சாத்திரத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருஉருவம் என்று மூன்றாக வழிபடுவர். உதாரணமாய், அருவம் என்று வழிபடப்படுவது சிதம்பரத்தில் ரகசியம். உருவம் என்று வழிபடப்படுவது சிவகாமி உடனுறை நடராஜர். அருஉருவமாக வழிபடப்படுவது அழகிய திருசிற்றம்பலமுடையார் என்ற ஸ்படிகலிங்கம். இது போலவே சாக்தாகமத்தில் அருவமாக வழிபடப்படுவது யந்திரமாகிய ஸ்ரீசக்ரம். உருவமாக வழிபடப்படுவது மனோன்மணி என்ற அறுபத்தி நான்கு அவையவங்களும் பூர்ணமாக பொருந்திய உமையம்மை.

அருஉருவம் என்பது உமையம்மையின் ஐம்பத்தோரு உறுப்புகளான கேசம், காது, கண், பாதம் போன்றவை. இந்த உறுப்புகளைத் தனித்து அமைத்து வழிபாடு செய்வது வழக்கம். சக்தி உபாசனையில், ஆசனம் அமைத்து அதில் உமையம்மையை எழுந்தருளச் செய்யாமல் அந்தந்த உறுப்பிற்குரிய வடிவத்தையோ, உறுப்பிற்குரிய அணிகலனையோ அந்த பீடத்தில் வைத்து அதையே உமையம்மையாகக் கருதி வழிபாடு செய்வர். சைவத்தில் லிங்க வழிபாடு போல் சாக்தத்தில் இதை அரு உருவ வழிபாடு என்பர். அந்த வழிபாட்டைப் பற்றிய ஒரு குறிப்பைத் தான் இங்கு “செப்பும்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

இதற்கு முன் சொன்ன பாடலில் “செப்பும்” என்ற வார்த்தையால் வேத ஆகமத்திலுள்ள உமையம்மை வழிபாட்டிற்குரிய மந்திரத்தை `நாமம்’ என்று கூறி குறிப்பிட்டார். இந்த பாட்டில் ஒவ்வொரு மந்திரத்திற்குரிய உடல் உறுப்புகளை வர்ணிப்பதாகக் குறிப்பிடுகிறார்.சாக்த ஆகமங்களின் வழி உமையம்மையின் உறுப்புக்கள் ஐம்பது இடங்களில் வழிபாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இதை `பஞ்சாசத் பீட ரூபின்யை’ என்ற நாமாவழியால் உணரலாம். ஆவியுடையார் கோயிலில் திருப்பாதங்களை மட்டுமே வழிபாடு செய்கின்றனர். ரேணுகா பரமேஸ்வரி கோயிலில் தலையை மட்டும் வழிபாடு செய்கின்றனர்.

சில கிராம தேவதை கோயில்களில் உமையம்மையின் சூலம், ஈட்டி போன்றவை வழிபாடு செய்யப்படுவதை இன்றளவும் காண முடிகிறது. உமையம்மையின் அணிகலனான சிலம்பு மற்றும் ஸ்ரீசக்ரம் பதிக்கப்பட்ட மார்புப் பதக்கம் இவற்றையும் வழிபாடு செய்கின்றனர். அந்த வகையில் இப்பாடலை உற்றுநோக்கும்போது இரண்டு வகை பூசனைகளான அகப்பூசை மற்றும் புறப்பூசை பற்றியும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

‘புறப்பூசை’ என்பதில் இறைவிக்கு கல் மற்றும் உலோகங்களால் திருமேனி அமைத்து அதற்கு நீராட்டல், அலங்காரம், நைவேத்தியம் போன்ற உபசாரங்களை பால், பழம், பூ போன்ற பொருள்களைக் கொண்டு வழிபாடு செய்வர். ‘அகப்பூசை’ என்பதில் புறப்பொருள் [திருஉருவம்] எதுவும் இன்றி உபாசகனானவன் தன் இதயத்தில் இறை இருப்பதாக எண்ணி பூஜிப்பதே தியானம் (அகப்பூசை) எனப்படும். இதை நியாசம் என்கிறது பூசனை கலைச்சொல்.

இந்த பாடலை பொருத்தவரை அரு உருவமாகிற உமையம்மையின் பத்து உறுப்புக்களை தியானம் செய்து அகப்பூசை முறையில் வணங்குவதையே மறைமுகமாக நமக்கு குறிப்பிடுகின்றார். அந்த வகையில் உமையம்மையின் கிரீடம், கேசம், நாக்கு, வலது ஸ்தனம், இடது ஸ்தனம், வயிறு, குண்டலம், மூன்று கண்கள், மேல் உதடு, கீழ் உதடு என்ற பத்து உறுப்புகளை அருஉருவமாக தியானம் செய்கிறார். அதனால், அடுத்த பாடலிலேயே பயனைப் பெறுகிறார் என்பதனால் இப்பாடலின் முக்கியத்துவத்தை உணரலாம். இவை அனைத்தையும் மனதில் கொண்டே “செப்பும்” என்ற ஒரே வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

மேலும், “செப்பும்” என்பதனால் சொல்லும் என்று அர்த்தம். சொல்லுவதற்குரிய முகவாயை இங்கே குறிப்பிடுகின்றார். ஜலஸ்தானம் என்ற இடத்தில் ப்ராமரி என்ற பெயர் தாங்கி விகிர்தாட்ஷர் என்ற பெயருடைய சிவபெருமானுடன் காட்சியளிக்கிறாள். இங்கு புறத்தில் தோன்றும் சக்தி பீட வழிபாட்டை அபிராமிபட்டர் அகப்பூசனை முறையில் அகத்தில் தியானிக்கிறார். `பாலினும் சொல் இனியாய்’ (60) என்பதன் மூலம் இதை நன்கு அறியலாம்.

வெற்றிலைபாக்கு தரித்ததனால் சிவந்த நாக்கையும் வாயின் உட்பகுதியையும் கொண்டவள், நறுமணம் கமழும் முகவாயை கொண்டவளாக உமையம்மை திகழ்கிறாள் என்பதை சரஸ்ரநாமத்தில் `தாலம்பூ பூரித முகி’ என்ற நாமாவளியினால் அறியலாம். இத்தகைய உமையம்மையின் முகவாயில் தோன்றும் அருள்வாக்கைப் பெறவேண்டி மனதிற்குள் வாய் என்ற உறுப்பை மட்டும் நினைத்து தியானம் செய்கிறார் என்பதையே “செப்பும்’’ என்கிறார்.

“கனக கலசமும் போலும்’’என்பதனால் உமையம்மையைப் பொன் நிறம் உடையவளாய்த் தியானிக்கிறார். அவ்வாறு தியானம் செய்வது என்பது தியானிப்பவர்களுக்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மலத்தை நீக்கி அருள வல்லது. இதையே பட்டர் `இடப்பாகம் கலந்த பொன்னே’ (88) என்பதனால் அறியலாம். உமையம்மையின் ஸ்தனமானது பருத்து இருக்கிறது. அதில் குழந்தைகளுக்குக் கருணை செய்யும் உணவாகிய ஞானப்பால் இருக்கிறது. மற்றும் உலகியல் இன்பத்தை வழங்கும் அமுதமும் இருக்கிறது.

இவை இரண்டு வெவ்வேறு தன்மையைக் கொண்டது. ஒன்று உடலிற்கு இளமையையும், வளமையையும் நோய் இன்மையையும் தரவல்லது. இதை அமுதம் என்பர். மற்றொன்று உயிருக்கு நலம் செய்யும் லௌகீக ஞானம், வைதீக ஞானம், பரஞானம், அபரஞானம், சிவஞானம் என்று ஐந்து அறிவை வழங்க வல்லது.

இதை `பால் அழும் பிள்ளைக்கு நல்கின’ (9) என்பதனால் ஞானப் பாலையும் `அமரர் பெருவிருந்தே’ (24) என்பதனால் உடல்நலன் தருகின்ற அமுதத்தையும், உலக உயிர்களின் மீது கருணை கொண்டு உமையம்மை அருள்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறார். மேலும், அந்த கருணை அளவின் மிகுதியை சூட்டவே “கனக கலசமும்” என்கிறார். கலசம் என்பது மூன்று பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. பருத்திருப்பு, உயர்ந்திருப்பு, கருணையாகிய பால் மிகுந்திருப்பது என்பதையே ஒரு உறுப்பின் பெயரை குறிப்பிடாது உமையம்மையின் பெயரையே குறிப்பிட்டார். இவை அனைத்தையும் மனதில் கொண்டே “கனக கலசமும்” என்று குறிப்பிடுகின்றார். சக்தி பீடங்களில் இராமகிரி என்ற இடத்தில் சிவானீ என்ற பெயரிலே சண்டர் என்ற சிவபெருமானுடன் கூடிய உமையம்மையின் வலது ஸ்தனத்தையே இங்கு தியானிக்கின்றனர்.

மேலும், ஜலந்தரம் என்ற இடத்தில் திரிபுரமாலினி என்ற பெயரில் பீஷணர் என்ற சிவபெருமானுடன் கூடிய உலகியல் வாழ்வை தரும் இடது ஸ்தனத்தை அரு உருவமாக அமைத்து வணங்குகின்றனர். இந்த சிவனுடன் கூடிய உமையம்மையையும் பட்டர் மனதில் அமைத்து தியானத்திலே “கனக கலசமும், போலும்” என்கிறார். “திருமுலை மேல் அப்பும் களப’’என்பதனால் தாந்ரீக சாத்திரத்தில் குறிப்பிடப்படும் சந்தனத்தை குறிக்கிறார். சந்தனக்குழம்பை கலசத்தில் வைத்து உமையம்மையை தியானிப்பது என்பது உலகில் புறச் செல்வங்கள் அனைத்தையும் அருள வல்லது. வீடு, மனைவி, மக்கள், சுற்றம், மற்ற அனைத்தையும் தரவல்லது. அதையே இங்கே குறிப்பிடுகின்றார்.

மேலும், “அப்பும் களப’’ என்பதனால் உமையம்மைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவதை சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அபிராமிபட்டர் காலத்தில் செய்வினை, நோய் இவற்றினால் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உமையம்மைக்கு சந்தனக் காப்பு செய்து வழிபடுவது வழக்கம். மேலும், கிராம தேவதையான காளி, மாரி போன்ற தெய்வங்களுக்கு சித்திரை மாதத்தில் வெயிலின் தன்மையைக் குறைக்க, மழை பெருக சந்தனக்காப்பு செய்து வழிபடுவர். மக்களை நோயிலிருந்து காப்பதால் `காப்பு’ என்ற வார்த்தையை ‘சந்தனக் காப்பு’ என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

திருமணம் போன்ற மங்கள சடங்கிலும், சந்தனத்தை மார்பில் பூசிக்கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. உணவு அருந்திய உடன் மார்பில் சந்தனம் பூசிக் கொள்வது என்பது அருந்திய உணவை செரிக்கச் செய்யும் என்கிறது ஆயுர்வேதம். ‘களப’ என்ற சொல்லிற்கு செல்வம் என்றும் அணிகலன், சந்தனம் என்றும் வெவ்வேறு பொருள்கள் உள்ளன. யானையின் தந்தத்தாலான அணிகலன்களை உமையம்மை அணிகிறாள். அது அணியப்பட்ட மார்பு என்று சூட்டுகிறார். யானையின் முகத்திலுள்ள இரண்டு முகடுகள் போன்று உமையம்மையின் கருணை கூர்ந்ததாக மார்பகம் அமைந்திருக்கிறது என்று சிற்ப சாத்திரம் குறிப்பிடுகிறது.

நிறைந்த அணிகலன்களை உமையம்மை அணிந்திருப்பதை “அப்பும் களப’’ என்ற வார்த்தையாலேயே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மனதில் கொண்டே “திருமுலை மேல் அப்பும் களப’’ என்கிறார். “அபிராம வல்லி’’“அபிராமி” என்பதனால் பெயரையும் “வல்லி” என்பதனால் இடையையும் குறிப்பிடுகின்றார். உமையம்மைக்கு முலை பருத்தும், இடை சிறுத்தும், விழி கறுத்தும், குழல் நீண்டும், இதழ் சிவந்தும் இருக்க வேண்டும். அப்படி இருப்பது என்பது தாய்மையை குறிக்கும். தாய்மைத் தன்மையை மிகுதியாக வைத்து உமையம்மையைத் தியானம் செய்தால், உபாசனையில் விரைவாக வெற்றி பெறலாம் என்கிறது சாக்த தந்திரம். அந்த வகையில் அபிராமி பட்டர் சிறுத்த இடையை தியானிக்கிறார். இதையே “வல்லி” என்ற வார்த்தையால் சூட்டுகிறார்.

இடையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தேவதை சிவகாமி. பஞ்சமூர்த்தியில் ஒருத்தியான அம்பாள், பாலாம்பிகா இம்மூவரைப் பற்றித்தான் இந்தப் பாடல் பேசுகிறது. திருக்கடவூரில் தலபுராணத்தில், காலசம்ஹார மூர்த்தியின் தேவியாகிய பாலாம்பிகை அல்லது காத்யாயினி. பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகன், சண்டேசர், சோமாஸ்கந்தர் இந்த நால்வருடன் கூடி எழுந்தருளும் சதாசிவ குடும்பினியாகிற அம்பாள் அபிராமவல்லி. பதினெட்டு தாண்டவத்தை ஆடிய நடராஜன் உடனுறை சிவகாமி. திருக்கடவூரில் உள்ள சபைக்கு காலாந்தக சபை என்று பெயர். இந்த சபைக்கு அதிகாரி சிவகாம சுந்தரியே ‘அந்தகன் பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு’ (39) என்பதனால் அறியலாம்.

இந்த மூன்று தேவியர்களுமே அபிராமி பட்டருக்கு அருளியவர்கள். ஒவ்வொரு உபாசகனும், தான் நினைத்ததை தேவதையிடத்து சொல்வதற்கும், தேவதையின் கருத்தை ஏற்பதற்கும், ஏற்றதை செயலில் செய்து முடிப்பதற்கும் அருளக் கூடிய தேவதைகள் முறையே இச்சா, ஞான, கிரியா சக்திகள் ஆகும். அதேபோல், அபிராமி பட்டர் பஞ்சமூர்த்தியில் உள்ள உமையம்மையை இச்சா சக்தியாகவும், சிவகாம சுந்தரியே ஞான சக்தியாகவும், பாலாம்பிகை கிரியாசக்தி என இம்மூன்றையுமே “அபிராம வல்லி” என்கிறார். உமையம்மை பிரபாசம் என்ற இடத்தில் சந்திரபாகா என்ற பெயருடன் வக்ர துண்டர் என்ற சிவபெருமானுடன் தியானிக்கப்படுகிறாள். அதையே அபிராமி பட்டர், “அபிராம வல்லி” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: