சப்தஸ்தான விழா; சக்கராப்பள்ளி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம்: சக்கராப்பள்ளி கோயிலில் சப்தஸ்தான விழாவையொட்டி இன்று ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடந்தது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் தேவநாயகி அம்பாள் சக்கரவாகேஸ்வரர் கோயில் உள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இக்கோயிலில் சப்தஸ்தான விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு இன்று அதிகாலை நடந்தது. கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சக்கரவாகேஸ்வர சுவாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதல் பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிய தொடங்கினர். பல்லக்கு புறப்பட்டபோது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனமும், கோபுர தரிசனமும் செய்தனர்.

இன்று கோயிலில் இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை எல்லை வரை ெசன்று மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜி ராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோயில் ஆகிய கிராமங்களில் வீதியுலா சென்றது. இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடக்கிறது. பின்னர் இரவு இலுப்பக்கோரை கிராமத்துக்கு சென்று மீண்டும் நாளை பசுபதிகோவில், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதி உலா வருகிறது. நாளை மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.

The post சப்தஸ்தான விழா; சக்கராப்பள்ளி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: