திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்

ருக்கோட்டியூர் கருந்தடமுகில் வண்ணனை
கடைக் கொண்டு கைதொழும் பக்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
எத்தவம் செய்தார் கொலோ

– என்று பரவசப்படுகிறார் பெரியாழ்வார்.
நியாயம்தான். ‘திருக்கோஷ்டியூர் எம்பெருமானை தினமும் தரிசித்து வாழும், அவ்வூரில் வசிக்கும் அடியவர்கள் மட்டுமல்லாமல், வந்து போகிறவர்களும் மிகுந்த தவம் செய்திருக்க வேண்டும்’ என்ற பொருளில் அவர் பாடியதில் நியாயம் உண்டு. ஏனென்றால் இது, ஒன்றுபட்ட சமுதாயத்துக்கு அடிகோலிய, சமத்துவ உணர்வு விஞ்சிய தலம். புராண காலத்திலிருந்தும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலிருந்தும், இந்தக் கருத்துக்கு ஆதாரமாக ஒவ்வொரு சம்பவத்தைச் சொல்லலாம்.

முதலில் புராண சம்பவம்:

பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்த இரண்யன், அவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றான். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவன் கோரிய வரங்களை அளித்தார் பிரம்மன். தன்னை நோக்கி தவமியற்றிய அவனது பக்தியை மெச்சியோ அல்லது தன்னை அவன் போற்றிய மகிழ்ச்சியாலோ அவர் அந்த வரங்களைத் தந்திருக்கலாம். அல்லது மஹாவிஷ்ணுவின் புதியதோர் அவதாரத்துக்கு, நரசிம்மம் அவர் அப்போதே வழி அமைத்துக் கொடுத்தார் என்றும் சொல்லலாம். அப்படி வரம் பெற்ற இரண்யன், தன்னை யாராலும் அழிக்கவே முடியாது என்ற இறுமாப்பில் எல்லா அநியாயங்களையும் செய்தான். பிரபஞ்சமெங்கும் தன் ஆட்சியை நிலைநிறுத்தினான். எங்கெங்கும் ‘ஓம் ஹிரண்யாய நமஹ’ என்ற மந்திரமே உச்சரிக்கப்படவேண்டும் என்று விதி செய்தான். தானே கடவுள் என்று பிரகடனம் செய்துகொண்டான். தன்னைத் தவிர வேறு யாரையும் இறைவனாகக் கருதி வணங்கக்கூடாது என்றும் கடுமையாக உத்தரவிட்டான். தனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில், குருகுலங்களில், மாணாக்கர்களுக்கெல்லாம் தானே பரம்பொருள் என்று கற்பிக்க குருமார்களை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்த சட்டதிட்டங்களுக்கு அசுரகுருவான சுக்ராச்சார்யாரும் உட்படவேண்டியதாயிற்று.

யாருடைய போதனையும், ஆலோசனையும் வேண்டாத இந்த அரக்கன் தன்னிச்சையாகச் செயல்பட்டான். இவனுடைய அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அவற்றைத் தாங்கவொண்ணாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். தன் கண்ணே தன்னைக் குத்தும் அவலம் அறிந்து வேதனையுற்ற அவர், அவர்களை அழைத்துக்கொண்டு ஈசனை சரணடைந்தார். பிரம்மன் அளித்த வரங்களைக் கேட்ட ஈசன், தன்னாலும் ஏதும் செய்ய இயலாத நிலையை உணர்ந்தார். பிறகு அனைவருமாக ஸ்ரீமன் நாராயணனிடம் அடைக்கலமாயினர். ஒரு கூட்டு முயற்சியாக, அனைவரும் ஒருங்கிணைந்து யோசித்து செயல்பட்டால்தான் இரண்யனுக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்றே அவரும் கருதினார். ஆனால், எங்கெங்கெல்லாம் தேவர்கள் ஒரு குழுவாகக் கூடுகிறார்களோ அங்கெல்லாம் இரண்யன் ஆஜராகி அவர்களைத் துன்புறுத்தத் தொடங்குவது வாடிக்கையாதலால், அவன் பார்வை படாத ஓரிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் உட்பட்டார்கள்.

முடிவாக அவர்கள் அனைவரும் கதம்ப முனிவர் குடியிருக்கும் குடிலைச் சார்ந்த பகுதிக்குச் சென்று திட்டமிடலாம் என்று தீர்மானித்தார்கள். அந்தப் பகுதியில் மட்டும்தான் இரண்யனின் ஆதிக்கம் இன்னும் உட்புகவில்லை. முனிவர் மிகவும் சுதந்திரமாக யாகங்கள் இயற்றுவதும், இறை வழிபாடுகளில் ஈடுபடுவதுமாக, கொஞ்சமும் அரக்க நெடி வீசாத இடமாக அது விளங்கியது. ஆகவே அங்கே போய் நிம்மதியாக இரண்யவதம் பற்றிப் பேசி ஒரு யோசனைக்கு வரலாம் என்று அனைவரும் அங்கே சென்றார்கள். இவ்வாறு அவர்கள் ஒரு பெருங்கோஷ்டியாகச் சென்றதால், அந்தத் தலம் கோஷ்டியூர் என்ற பெயர் பெற்றது, திருக்கோஷ்டியூர் என்றழைக்கப்பட்டது. இரண்யன் வதம் செய்யப்படும்வரை தேவர்கள் அந்தத் தலத்திலேயே அவன் பார்வையில் படாமல் வாழ்வது என்று முடிவானது. அதற்கு முன் மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம் எடுத்த பெருமாள், அடுத்ததாக ஒரு புது அவதாரம் எடுத்து இரண்யனை சம்ஹாரம் செய்யலாம் என்ற யோசனையும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதற்கான முன்னேற்பாடுகள், வரைமுறைகளை அவர் செய்துகொள்வார் என்றும் தீர்மானித்தார்கள். வைகுந்தத்துக்குத் திரும்பிய பரந்தாமன் தன்னுடைய நித்ய சூரிகளாக விளங்குபவர்களில் ஒருவரான சங்கு கர்ணனை அழைத்தார். இரண்யனுக்கும் அவன் மனைவி வசந்தமாலைக்கும் மகனாகப் பிறக்குமாறு அனுப்பி வைத்தார். அதன்படி இரண்யனின் மகனாகி, பிரஹலாதன் என்று பெயரும் பெற்றான் சங்கு கர்ணன். திருமாலிடமிருந்தே வந்தவன் என்பதால் கருவிலேயே திரு கொண்டு, எம்பெருமானையே எப்போதும் துதித்து வணங்கிவந்தான், பிரஹலாதன். அகிலமெங்கும் தன் ஆதிக்கத்தால் அழிசாட்டியம் பண்ணிக்கொண்டிருந்த இரண்யன், தன் குடும்பத்திலேயே, தன் வீட்டிலேயே எதிர்ப்பு முளைவிடுவது கண்டு கொதித்துதான் போனான். தன் அரண்மனை, குருகுலம், தன் நாடெங்கிலும் ஓர் அபஸ்வரம் ஒலிப்பதை முதன்முறையாகக் கேட்டு கோபத்தின் உச்சத்தைத் தொட்டான். ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அந்த ‘அபஸ்வரம்’ அவன் காதுகளை மட்டுமல்லாமல், இதயத்தையே குத்திக் கிழித்தது.

தன்னைவிட பெரிய ஒரு கடவுள் இருப்பதாகத் தன் மகனே கருதுவதையும், பூஜிப்பதையும் கண்டு பொறுக்காத இரண்யன், அந்த நாராயணனையும் அழித்து தானே முதல்வன் என்று பெயரெடுக்க விரும்பினான். ஆகவே, ‘எங்கேயடா இருக்கிறான், உன் நாராயணன்?’ என்று அலட்சியமாகக் கேட்க, ‘எங்குதான் அவன் இல்லை? எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் அவன். ஏன், உங்களுக்குள்ளும் இருப்பதால்தான் அவன் பெயரை உச்சரிக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்தத் துரும்பென்ன, அதோ அந்தத் தூணென்ன, எல்லாவற்றிலும் உறைந்திருப்பவன் அவன். ஜடப்பொருளில்கூட அவனைக் காண முடியுமே!’ என்று உறுதியான குரலில் ஆணித்தரமாக உரைத்தான்
பிரஹலாதன்.பிறகு அவன் காட்டிய தூணை உதைத்து, நரசிம்மாவதாரமாக நாராயணன் வெளிப்பட்டு இரண்யன் வதைபட்டான். இப்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவர்கள் என்று அனைவருமே ஒன்றுகூடி, ஒரு முக்கியமான நிகழ்வுக்காக ஒன்றுபட்ட இடம்தான் திருக்கோஷ்டியூர். இங்கே சைவ, வைணவ பேதமில்லாத ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது. அனைவரும் ஒருமுகமாக ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள அந்தக் கருத்து செயலாக்கப்பட்டு, அரக்கனின் வதம் முடிந்தது.

சரி, கலியுக சம்பவம் என்ன?

புரட்சித் துறவி, ராமானுஜர், இந்தத் திருக்கோஷ்டியூரில்தான், இதே ஊரில் வாழ்ந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெற்றார். அப்போது திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்துகொண்டிருந்த அவர், இப்படி உபதேசம் பெற பெரிதும் துன்பப்பட வேண்டியிருந்தது. ஆமாம், அவ்வளவு சுலபத்தில் மந்திரோபதேசம் அவருக்குக் கிடைத்துவிடவில்லை. ஸ்ரீ ரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு, ராமானுஜரும் சளைக்காமல் பதினேழு முறை நடந்து, நடந்து சென்று முயற்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி 17 முறை நடந்து வந்ததில் ராமானுஜரைப் பொறுத்தவரை ஓர் அனுபவம் கிட்டியிருக்கும். வழியில் தன்னைக் காணும் தாழ்குல மக்கள் பலர் கைக்கட்டி, வாய்பொத்தி, சற்று விலகிப்போய் அவருக்கு வழிவிட்ட ‘ஒதுங்கும்’ முறை கண்டு மனம் வெதும்பியிருப்பார். நம்மைப் போல இவர்களும் மனிதர்கள்தானே, இப்படி இவர்கள் ஒதுங்கிப் போய், நம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று குமுறியிருப்பார். இப்படி மரியாதை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் காரணமாக ஒதுங்கிச் செல்லும் மனிதர்கள் தன் நடைவழியில் மட்டுமல்லாமல், இந்த பாரத தேசமெங்கும் பரவியிருக்கவேண்டும் என்றே அவர் கருதினார். நாராயணன் படைப்பில் இப்படி ஒரு பேதமா, இது தவறாயிற்றே என்று கருதியிருப்பார்.

இந்த இவருடைய எண்ணத்தை மேன்மேலும் வலியுறுத்தவும், வலுப்படுத்தவும்தான் திருக்கோஷ்டி நம்பி அவரை பதினேழு முறை அலைக்கழித்தார் போலிருக்கிறது! பதினெட்டாம் முயற்சியில் குருவின் திருவருள் கிட்டியது. அப்போதும் நம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கவேண்டும். ‘இத்தனை முயற்சித்து இவன் மந்திரோபதேசம் பெற வருகிறானென்றால், இதில் ஏதோ சுயநலம் இருக்க வேண்டும். அந்த மந்திரத்தின் பலனை ஏதேனும் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறானோ’ என்று யோசித்தார். அதனாலேயே, உபதேசம் செய்த பிறகு, ‘இந்த உபதேசம் உனக்கு, உனக்கே உனக்கு மட்டும்தான். இதனை நீ ‘துஷ்பிரயோகம்’ செய்தாயானால், உனக்கு மறுமையில் நரகவாசம்தான்,’ என்று பயமுறுத்தி வைத்தார். இந்த பயமுறுத்தலுக்குப் பின்னாலும் ஒரு தந்திரம் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. வெறுமே மந்திரோபதேசம் மட்டும் பெறுவது ராமானுஜரின் நோக்கமாக இருக்காது; பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டு அவமானமடைந்தாலும், மீண்டும் வந்து உபதேசம் அளிக்குமாறு இறைஞ்சும் இந்த மனோதிடம், வேறு எதையோ திட்டமிட்டிருக்கிறது என்று நம்பி உணர்ந்திருப்பார். அதனாலேயே அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறட்டும் என்று கருதியே பயமுறுத்தியிருக்கிறார் போலிருக்கிறது! இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியே ரகசியம் பாராட்டினாலும், பொது நோக்கு ஒன்றாகவே இருந்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஒற்றை மனிதராக ராமானுஜர் அந்த மந்திரோபதேசத்தைப் பெற்று, பிறகுதான் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கும், அவருக்கு அடுத்தவருக்கும் என்று சராசரியாக ஒரு பரம்பரைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த உபதேசத்தை வழிமொழிவது என்ற வாழையடி வாழை கருத்து, கொள்கையை நம்பி கொண்டிருந்தார், நம்பி. ஆனால் ராமானுஜரோ மரம் ஒன்றானாலும், விழுதுகள் ஆயிரம் என்ற ஆலமரக் கருத்து, கொள்கையைக் கொண்டிருந்தார். அதனால்தான் குரு பயமுறுத்தினாலும், ஒரு தனி மனிதரை இழப்பதால் பல்லாயிர மக்கள் நலம்பெற முடியுமானால், அப்படி இழக்கப்படும் மனிதர் தானாகவே இருக்கட்டும் என்று உறுதி பூண்டிருந்தார் ராமானுஜர். நிதானமாக குருவின் உபதேசத்தை செவிமடுத்தார். மந்திரத்தையும், அதன் பொருளையும் உள்வாங்கிக்கொண்டார். இதயக் கோயிலில் திருமாலை இருத்தி, அந்த மந்திரத்தால் பல நூறுமுறை அர்ச்சித்தார். பிறகு திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறினார். அங்கிருந்தபடியே ஊர் மக்களை எல்லாம் அழைத்தார். கோபுர உச்சியிலிருந்து ராமானுஜர் கூவி அழைப்பதை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உடனேயே கூடிவிட்டார்கள். விபரீத கற்பனையுடன் அண்ணாந்து பார்த்த அவர்கள் மீது ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாக்ஷர மந்திரம் பூத்தூவலாக விழுந்தது. ஒரு துளி பட்டவுடன் சிலிர்ந்துக்கொண்ட அவர்கள், அதுவே மழையாகப் பொழிந்தபோது அப்படியே பரவசப்பட்டனர்.

மந்திரத்தையும், அதன் பொருளையும் நன்கு கேட்ட அவர்கள், அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி தங்களுக்குள் ஓர் உயர்வை வளர்த்துக் கொண்டனர். ‘நமக்கும் இறையருள் உண்டு’ என்ற நம்பிக்கை துளிர்த்தது. இருகரம் கூப்பி மேலே நின்று கொண்டிருந்த ராமானு ஜரைத் தொழுதார்கள். எதிர்பார்த்ததுபோல நம்பி போலியாக வெகுண்டார். ‘‘என் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டாய். உனக்கு நரகம்தான்,’’ என்று சபிப்பது போல நடித்தார். ராமானுஜருக்குத் தான் தனிச் சலுகை அளிக்கவில்லை என்று தன்கூட இருந்தவர்களுக்கு ‘ஆறுதலும்’ அளித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே உணர்ச்சிவசப்பட்டவராக, ‘நீர்தான் எம்பெருமானாரோ!’ என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார். அப்போதே மானசீகமாக அவர் நாராயணனிடம் வேண்டிகொண்டிருந்திருப்பார்: ‘பகவானே, இந்தப் பிள்ளைக்கு தீர்க்காயுசு கொடு.’இதனால்தான் ‘நரகம்தான்’ என்று சபிக்கப்பட்ட ராமானுஜரால், ஒரு முழு மனித ஆயுளை வாழ்ந்து, 120 ஆண்டுகள் சமூகத்துக்கும், இறைவனுக்கும் தன் நிறைவுநாள்வரை உழைக்க முடிந்திருக்கிறது.இந்தப் பெருமை ஸ்ரீ ராமானுஜருக்குமட்டுமே உண்டு. வேறு எந்த மனிதப் பிறவியும் இப்படி முழு வாழ்க்கையை, உலகத்தின் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்! இப்படிசமுதாய பிரக்ஞை பொலிந்த அற்புதத் திருத்தலம்தான் திருக்கோஷ்டியூர். மூன்று நிலைகளாக இந்தக் கோயில் பரிமளிக்கிறது.

‘வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற’ திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாதனை முதல் தளத்தில், வைகுந்தத்தில் உரகமெல்லணையானாக தரிசிக்கலாம். இரண்டாவது நிலையில், இந்திர லோகத்தில் இரு தேவியருடன் பெருமாள் நின்ற கோலத்தில், உபேந்திர நாராயணனாக, நின்ற நம்பியாக சேவை சாதிக்கிறார். மூன்றாவது நிலையில், பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலம் கொண்டு பரவாசுதேவனாக அருள்கிறார்.கோயிலுக்குள் நுழையும்போது பலிபீடம், துவஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும்போது மெல்லிய வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது. ஆமாம், இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சநகாதி முனிவர்கள், நாகர் சிலைகளும் காட்சியளிக்கின்றன. சௌமிய நாராயணன் சந்நதிக்குப் பின்னால் இந்த சிவ சந்நதி அமைந்துள்ளது.

கோயிலினுள் நுழைந் ததுமே இடப் பக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீ ராமன், சீதை, லட்சுமணன், அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகி றார்கள். இருவரும் ஒருவருக் கொருவர் மனதளவில் புரிந்து கொண்டு, பரந்த சமுதாய நலனுக்கு செய்த முயற்சிகள் நினைவுக்கு வர, இந்தப் பெருமகனார் முன் நிற்கும்போது கண்களில் நீர்த் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்து, சக்கரத்தாழ்வார் அருள் தரிசனம் நல்குகிறார். சற்றுப் பக்கத்தில் ருக்மிணி, சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகுற காட்சியளிக்கிறார். இதே தோற்றத்தையும், கிருஷ்ணனின் இன்னும் பலவான அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அப்போது மதுரையை ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய குரு, செல்வ நம்பி என்பவர். திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவரான செல்வநம்பி வருடந் தவறாமல் கிருஷ்ணனின் அவதார விழாவை இந்த ஊரில் சிறப்பாக நடத்துவார். ஒருமுறை அவர் பெரியாழ்வாரை இந்த விழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். வந்த பெரியாழ்வார் அப்படியே பிரமித்துப் போய் நின்றுவிட்டார். அவருக்கு திருக்கோஷ்டியூர் அப்படியே ஆயர்பாடியாகவே தெரிந்தது.

அங்கே கண்ணனின் குறும்புத் தனங்களைக் கண்டு அவர் மனம் விம்மினார். ‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்’ என்று பாடி சிறப்பித்தார். அவர் கண்டு களித்த காட்சிகளில் ஒன்றுதான் இந்த (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம். இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் அர்ச்சாவதாரம், நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது. அடுத்து, உற்சவரான சௌம்ய நாராயணனை தரிசிக்கலாம். ஸ்ரீ தேவி – பூதேவி சமேத இந்த உற்சவர் முற்றிலும் தூய வெள்ளி உலோகத்தால் ஆனவர்.‘வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்’ என்று திருமங்கயாழ்வார் இந்த உற்சவரை பாடி மகிழ்கிறார். இவரை தரிசித்து விட்டு மேலே சில படிகள் ஏறி தேவலோகத்துக்குச் செல்லலாம். இங்கே பெருமாள் சயன கோலத்தில் அற்புத தரிசனம் தருகிறார்.இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீ தேவி – பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார்.
ஆமாம், இங்கே, பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, பாரதி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார்.

பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது, கைடபர் அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திருமால் பெயர் கொள்கிறார். பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டதால், இவர் ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை.உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்! இந்த விமானத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. இதன் வடபகுதியை மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவ தச்சனும் அமைத்தார்கள். மூன்று பகுதிகள் கொண்ட அஷ்டாக்ஷர மந்திரம் போன்றும், மூன்று எழுத்துகள் கொண்ட ஓங்கார ஒலி போன்றும், மூன்று நிலைகளை இந்த விமானம் பெற்று விளங்கியது. அடுத்து, இரண்டாவது மாடியில் இந்திரலோகம் திகழ்கிறது. இங்கே பெருமாள் ஸ்ரீ தேவி – பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட முடியாது. குறுகலாக மேலேறும் படிகள். ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக்கொண்டுதான் போக முடிகிறது.

பரமபதம் அடைவது என்பது அவ்வளவு சுலபமா என்ன! மிகவும் சிறப்பு வாய்ந்த தளம் இது. ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக வைகுண்டநாதன் அழகு தரிசனம் தருவதால் மட்டுமல்ல; கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்த வண்ணம் அவரது திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் சந்தோஷத்தைத் தருகிறது. கீழிறங்கி வந்து தாயார் திருமாமகள் நாச்சியாரைக் கண்குளிர தரிசனம் காணலாம். இவருக்கு நிலமாமகள், குலமாமகளென்றும் திருநாமங்கள் உண்டு. வெளிப் பிராகாரத்தில் மகாமகக் கிணறு ஒன்று இருக்கிறது. இதனை சிம்மக் கிணறு என்றும் சொல்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே நீராடுவது பக்தர்களின் வழக்கம்.
எப்படிப் போவது: மதுரை – காரைக்குடி வழியில் 24 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கோஷ்டியூர். காரைக்குடி – சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிருந்து 5 கி.மீட்டரில் உள்ள அரியக்குடி சென்றும் இத்தலம் அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம் 1 மணிவரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணிவரை.
முகவரி: அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியுர் – 630 210

தியான ஸ்லோகம்

க்யாதே கோஷ்டிபுரே ப்ரஸித்த விபவ: ஸ்ரீ ஸௌம்ய நாராயண:
தீர்த்தம் திவ்யஸரோ விமாநம் அமலந்த் வஷ்டாங்க நாமாத்புதம்
தஸ்யஸ்ரீர் தயிதா கதம்பமுநயே ப்ரத்யக்ஷ ரூபப் புரா
கோஷ்டீ பூத ஸமஸ்த தேவநிகரோ, தேவ:
புரஸ்தாந்முக:

The post திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: