இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை


சென்னை: இன்சூரன்ஸ் இல்லாத காரில் ஊர்வலமாக வந்து, வேட்புமனு தாக்கல் செய்த தென் சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2,000 அபராதம் விதித்தனர். தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், பாஜ சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று வரை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழ்செல்வி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கட்சி நிர்வாகிகளுடன் நேற்று சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திற்கு திறந்தவெளி ஆடி ஏ4 காரில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும் வேட்பாளர்கள் வரும் வாகனத்தையும், கட்சியை சேர்ந்தவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வீடியோ எடுப்பது வழக்குமாகும். இந்நிலையில் தமிழ்ச்செல்வி வந்த காரின் இன்சூரன்ஸ் கடந்த செப்டம்பர் மாதமே முடிந்துள்ளது தெரிய வந்தது. இன்சூரன்ஸ் இல்லாத ஆடி ஏ4 காரில் தென்சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த காருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.2000 அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ் செல்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீமான் தான் எங்களுடைய சின்னம், சின்னம் எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. ஆடி காரின் இன்சூரன்ஸ் ரினியூவல் பண்ணவில்லை என்று கேட்டதற்கு, அது என்னுடைய கவனத்திற்கு வரவில்லை,’’ என்றார்.

The post இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: