சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளர்கள் நியமனம்: மாநகராட்சி அறிவிப்பு


சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளர்கள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்களுடன் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தங்கள் பங்கிற்கு அனைத்து வேலைகளையும் முழு வீச்சில் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் வாக்கு சதவீதம் குறையாமல் இருப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தேர்தல் அனறு விடுமுறை விடப்பட்டு பொதுமக்கள் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட தேர்தல் காவல் பார்வையாளர் உதய் பாஸ்கர் பில்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 12 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட காவல் பார்வையாளர் சஞ்சய் பாட்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

The post சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளர்கள் நியமனம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: