தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தகவல்

சென்னை : வட சென்னையில் வேட்பு மனு தாக்கலின் போது நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். வட சென்னையில் நேற்று வேட்பு மனு தாக்கலின் போது, யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதை திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு தாக்கலுக்கு வந்த பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். இது குறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது, தலைமை தேர்தல் அதிகாரி சாஹுவிடம் கேட்ட போது,

தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். அத்துடன் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வாக்குப்பதிவு தினத்தன்று தனியார் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழிலாளர் நலத்துறை ஆணையம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது. தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது; வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்; 27 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளன” இவ்வாறு குறிப்பிட்டார்.

The post தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: