ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம்

ஒருவன், ஒரு சிறு மெழுகுவர்த்திக்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு உயர்ந்த படிக்கட்டு களில் ஏறத் தொடங்கினான். அப்பொழுது, மெழுகுவர்த்தி அம்மனிதனைப் பார்த்து, ‘‘என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அந்த மனிதன், ‘‘உன்னை நான் கலங்கரை விளக்கத்தின் மேல் எடுத்துச் செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டப்போகிறாய்’’ என்றான். அதற்கு மெழுகுவர்த்தி, ‘‘நானோ சிறு வெளிச்சம். நான் எப்படி கப்பல்களுக்கு வழிகாட்ட முடியும்?’’ என்று கேட்டது. அப்போது அவன், ‘‘நீ உன்னால் முடிந்த வெளிச்சத்தை மட்டும் கொடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றான். அவன் அந்த மெழுகுவர்த்தியை மேலே கொண்டு சென்று, அங்கிருந்த ஒரு ராட்சச விளக்கின் தீபத்தை ஏற்றினான். அப்பொழுது அது மிகப்பெரிய வெளிச்சமாகியது. அருகிலிருந்த ஒரு கண்ணாடி, அந்த வெளிச்சத்தை கடலில் பாய்ச்சியது. அதன்மூலம் கப்பல்களுக்கு வழிகாட்டப்பட்டது.

இறை மக்களே, தேவன் பிரகாசமான வெளிச்சமாக இருக்கிறார். மேலும், இவ்வுலகில் வாழும் நம்மையும் பிரகாசிக்கச் செய்ய விரும்புகிறார். ஆகவே, மெழுகுவர்த்தி தன்னை முழுமையாக உரிமையாளரிடம் அர்ப்பணித்தது போல, நாமும் நம்முடைய ஞானம், திறமை, அறிவு போன்றவை சிறியதாக இருந்தாலும், அதைத் தேவனுடைய கரத்தில் முழுமனதாய் கொடுப்போமானால், அவர் நம்மை உலகிற்கு ஆசீர்வாதமாய்ப் பயன்படுத்துவார்.பலர் தங்களது எதிர்மறையான சூழ்நிலையில் தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடுவதுண்டு. அல்லது, பிறரது எதிர்மறையான வார்த்தைகளை உள்வாங்கி மனமுடைந்து தன் அழகான வாழ்க்கையை இருளடையச் செய்து விடுகின்றனர். அன்பு நண்பர்களே, ‘‘நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்’’ (மத் 5:14) என்று இறைவேதம் கூறுகிறது.

விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் என்ற வசனத்தின்படி நீங்கள் வௌிச்சம் கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்பதே உங்களைக் குறித்த தேவத் திட்டம். ஆகவே தேவன் உங்களுக்கு கொடுத்த சிறுசிறு காரியங்களைத் தேவனுடைய கரத்தில் முழுமனதாய் கொடுப்போமானால், அவர் உங்களை உலகிற்கு ஒளியாக அல்ல பேரொளியாக மாற்றுவார்.
– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம் appeared first on Dinakaran.

Related Stories: