ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணர் 20-20

*கருவறையில் காளிங்க நர்த்தனமாடும் கண்ணன்; கோபுர வாயிலுக்கு அருகில் ஆனந்த நர்த்தனமாடும் கணபதி என்று தனிச் சிறப்பு கொண்ட கோயில் இது.
* இத்தல மூலவர், தேவி – பூதேவி சமேதராகத் திகழும் வேத நாராயணராகப் போற்றப்படுகிறார்.
* தேவலோகப் பசுவான காமதேனுவின் புதல்விகளான நந்தினி, பட்டி என்ற பசுக்களுக்கு தன் காளிங்க நர்த்தனத்தை இங்கு ஆடிக் காட்டினாராம் கண்ணன்.
*நாரத முனிவரின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணன் காளிங்க நர்த்தனனாக இத்தலத்தில் காட்சியளிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.
*இந்த காளிங்க நர்த்தன கண்ணன் விக்ரகம், ஆலயத்தின் பின்புறமுள்ள காளியன் மடுவிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.
*காளியன் என்ற ஐந்து தலை பாம்பின் தலையை மிதித்துக்கொண்டிருப்பது போல் தோன்றும் பகவானின் திருவடி, தலை மீது ஒட்டாமல், ஒரு காகித இடைவெளி இருப்பது சிற்பக் கலையின் அற்புதம். பிறகு சிலையின் ஆதாரம்? இடது கரத்தால அந்தப் பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறாரே, அதுதான்!
*17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி வேங்கடசுப்பையருக்கும் ஆலயத்தில் தனிச் சந்நதி உள்ளது.
* இந்த கிருஷ்ணனைப் போற்றி, ‘தாயே யசோதா’, ‘அலைபாயுதே’, ‘ஆடாது அசங்காது’, ‘பால்வடியும் முகம்’, ‘என்ன தவம் செய்தனை’ போன்ற கண்ணன் பாடல்களை இயற்றியவர் அவர். இந்தப் பாடல்களை ஆலயத்தில் எழுதி வைத்துள்ளனர்.
*துலா மாதம் மக நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. அன்றுதான் கண்ணனின் தரிசனம் வேங்கடசுப்பையருக்கு கிட்டியது.
*காமதேனு பசுவின் குழந்தைகளான நந்தினியும் பட்டியும் இப்பகுதியில் கண்ணனைத் தேடித் திரிந்ததால் இத்தலம் கோவிந்தகுடி என்றும், பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
*காமதேனுவின் சுவாசமாக இத்தலம் விளங்கியதால் தேனுசுவாசபுரம் என்று வடமொழியிலும், மூச்சுக்காடு என்று தமிழிலும் வழங்கப்பட்டு பின் ஊத்துக்காடு என திரிந்தது.
*திருமணம், புத்திரப்பேறு என வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்கிறான் இந்தக் காளிங்கநர்த்தனன்.
*ராகு, கேது தோஷம், விஷ சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களின் பரிகாரத்தலமாக இத்தலம் விளங்குகிறது.
*சங்கீதம், நாட்டியம் பயில்பவர்கள் இத்தலத்தில் இந்த கண்ணனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஆலயத்திலேயே அரங்கேற்றம் செய்வதும் உண்டு.
*சுமார் இரண்டரை அடி உயரமே உள்ள இந்த கண்ணன் விக்ரகம் இருபுறமும் ருக்மிணி, சத்யபாமா சகிதம், நந்தினி, பட்டி பசுக்களுக்கு அருள்புரியும் வண்ணம் அமைந்துள்ளது.
* தனிச் சந்நதியில் மகாலட்சுமித் தாயாரின் தரிசனம் பரவச மூட்டுகிறது.
*இத்தலத்தில் அருளும் பஞ்சமுக ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியாக பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
*‘பார்வை ஒன்றிலே விளைந்த பாக்கியமிது, யார்க்கும் இது அரிதானது’ என கண்ணனின் தரிசனத்தை வியந்த ஊத்துக்காட்டாரின் அனுபவம், அவனை தரிசிப்போர் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கையே.
*ரோகிணி நட்சத்திரம், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
*தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இருக்கிறது ஊத்துக்காடு.

 

The post ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணர் 20-20 appeared first on Dinakaran.

Related Stories: