திருமணத்தை தாமதிக்கும் சர்ப்ப தோஷம்

‘பையனுக்கு காளசர்ப்ப தோஷம் இருக்கு. அதனால இன்னொரு தோஷ ஜாதகமா பார்த்துத்தான் சேர்க்கணும்’’ என்று ஜோதிடர் சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் பதறுவார்கள். ‘‘ஒண்ணும் பயப்படாதீங்க… பரிகாரம் பண்ணா போதும்’’ என்று சொன்ன பிறகுதான் கொஞ்சம் பயம் தெளிவார்கள். அதற்குப்பிறகுதான் ராகு மற்றும் கேதுவின் பெயர்கள் பரிச்சயமாகும். ‘‘அதெல்லாம் பாம்போட பேராச்சே. நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்’’ என்று மெல்லக் கேட்பார்கள். அதனால், ‘ராகு – கேது என்றால் என்ன… அந்த கிரகங்கள் நம் வாழ்வில் என்ன ஆளுமை கொண்டுள்ளன’ என்பதை முதலில் புரிந்து தெளிவோம். மனிதனின் ‘சப்கான்ஷியஸ் மைண்ட்’ எனும் நனவிலி மனம்தான் ராகு. அதனால்தான், ஜோதிடத்தில் கனவு களைப் பற்றிச் சொல்பவராகவும் ராகு இருக்கிறார். ‘சிக்ஸ்த் சென்ஸ்’ என்று சொல்லப்படும் ஆறாம் அறிவு தான் கேது. இன்னும் சொன்னால் நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துவதுதான் கேது.

உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளைக் குறித்த அறிவை அளிப்பவர்தான் கேது. எல்லோருக்கும் சிந்தனை உண்டு. அந்த சிந்தனைகளுக்கு தூண்டுகோலாகவும், துலங்குபவர்களாகவும் விளங்குபவர்கள் ராகுவும் கேதுவும்தான். நவக்கிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்கென்று உரிய நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. ஆனால், ராகுவிற்கும் கேதுவுக்கும் தனிப்பட்ட பாதைகள் எதுவும் இல்லை. பன்னிரண்டு ராசிக் கட்டங்களில் அதற்கென்று தனிப்பட்ட வீடுகளும் இல்லை.ஏன்? ராகுவும் கேதுவும் உண்மையிலேயே கிரகங்கள் அல்ல. அவை நீண்ட நிழல். அந்த நிழலே கிரகங்களுக்குரிய சக்தியைப் பெற்றிருக்கிறது. அதனாலேயே அவற்றை ‘சாயாகிரகங்கள்’ என்று அழைத்தார்கள். அந்த நிழல்போன்ற வடிவம் எப்படி உருவானது? ஒரு ரயில் அதிவேகமாகப் போகிறது. அப்போது அந்த ரயிலுக்கு அருகேயே அதன் வேகத்திற்கு ஈடாக ஒரு சக்தி உருவாவதை கவனித்திருக்கிறீர்களா. சில சமயம் ரயிலுக்கு அருகே நிற்கும்போதே காந்தம்போல அந்த சக்தி இழுத்துப் போடும். காரணம், அந்த ரயிலின் வேகமான இயக்கம். அப்போது அந்த சக்திக்கு அருகேயுள்ள பல பொருட்கள் அலைக்கழிக்கப்படு கின்றன. அருகில் ஜீவராசிகளோ… ஏன் மனிதர்கள் இருந்தால்கூட தூக்கி எறியப்படுகிறார்கள். அதுபோலத்தான் கிரகங்களின் சுழற்சியின்போது, அவற்றை ஒட்டி மின் காந்த அலைகள் போன்ற சக்திகள் உருவாகும். அந்த சக்திக்குத்தான் ராகு என்றும், கேது என்றும் பெயர். தன் பாதையில் சுற்றும் கிரகங்களுக்கு இணையான மிகப் பெரிய படலமாக அது காணப்படுகிறது.

காற்றில் தரைக்காற்று, மேல் காற்று என்று இருப்பதுபோல… அந்தப் படலத்தின் மேல் படலத்தையே கேது என்றும், கீழ் படலத்தையே ராகு என்றும் அழைக்கிறோம். பேருந்து ஒன்று வேகமாகக் கடந்து சென்றுவிட்ட பிறகும் அவ்விடத்தில் ஏற்படும் புழுதிப்புயல்தான் ராகுவும் கேதுவும். அந்த சக்தியின் அசைவுகள் பாம்பு போன்று வளைந்தும் நெளிந்தும் காணப்படுகின்றன. ஏனெனில், அந்த சக்திகளுக்கு எந்தப் பாதையும் இல்லை. நீங்கள் வெயிலில் நின்றால் உங்கள் நிழல் கீழே விழத்தான் செய்யும்; ஆனால், அது நீங்கள் அல்ல! அப்படித்தான் ராகுவும், கேதுவும். கிரகணங்களே கூட நிழலை மையமாக வைத்துத்தான் சொல்லப்படுகின்றன. அந்த நிழலான ராகு என்கிற பாம்பு சந்திரனை கவ்வுகிறது என்று எளிமையாகச் சொன்னார்கள்.

‘சனி போல ராகு, செவ்வாய் போல கேது’ என்று ஒரு ஜோதிட மொழி உண்டு. சனியின் உட் கரு, உள் நிறம் கறுப்பு. வெளி நிறம் நீலம். அதனால்தான் நீலத்தையும் ராகுவோடு இணைத்து கருநாகம் என்றழைத்தார்கள். செவ்வாயின் தணல் சிவப்பாக இருக்கும். கேதுவிடம் செவ்வாயின் சாயல் இருப்பதால் செந்நாகம் என்றார்கள். சில விஷயங்களை, சில நேரங்களில், சில மனிதர்களால் நேரடியாக முடிக்க முடியாது. அப்போது தங்கள் சார்பாக, தங்கள் சாயலாக சிலரை அனுப்பி முடித்துக் கொள்வார்கள். தங்கள் நிழலாக இருப்பவர்களை அனுப்பி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இங்கு சனியும், செவ்வாயும் செயல்படுகின்றன. ஏனெனில், ராகுவும், கேதுவும் சனி மற்றும் செவ்வாயின் சில அம்சங்களோடு வேலை செய்கின்றன.

எனவேதான் ஜோதிடத்தில் கூட ராகுவின் ஆதிக்கம் உள்ளவர்களாகவே நிழல் உலக தாதாக்களை சொல்கிறார்கள். ராகு ஆதிக்கம் மிக்கவர்களிடம் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது. சாதி, மதம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தாண்டி சாதிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். பெரிய குறிக்கோள்களும் திடமான தொலைநோக்குப் பார்வையும் இருக்கும். இவர்கள் பேசுவதும், செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாததாக நமக்குத் தெரியும். ‘பகல் கனவு காணறான் பார்’ என்பார்கள். ஆனால், நினைப்பதை சாதித்தே தீருவார்கள். மெல்லிய உடல் வாகும், சற்று உயரம் கூடியும் இருப்பார்கள். எதிலுமே கொஞ்சம் பொடி வைத்துப் பேசுவார்கள். தற்புகழ்ச்சி யோடு சேர்த்து தனக்குப் பிடித்தமானவர்களைப் பற்றியும் பேசுவார்கள். ராகு தந்தைவழிப் பாட்டன் – பாட்டி உறவையும், கேது தாய்வழிப் பாட்டன் – பாட்டியின் உறவையும் நிர்ணயிக்கிறார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு நன்றாக இருப்பின், நயமாகப் பேசுவார்கள். இல்லையெனில் தூக்கி எறிந்து பேசுவார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியத்தை முடிப்பார்கள். கேது நன்றாக இருந்தால், பேச்சில் ஞானம் தெறிக்கும். சரியில்லையெனில் முன்கோபியாகவும், மூர்க்கராகவும் மாறுவர். கோமேதகக் கல்லில் ராகுவும், வைடூரியத்தில் கேதுவும் ஒளிர்கிறார்கள். தானியங்களில் ராகு உளுந்தாக உள்ளார். கேது கொள்ளாக இருக்கிறார். மந்தாரை மலரில் ராகுவும், செவ்வல்லியில் கேதுவும் வாசம் வீசுகின்றனர். நிக்கலை ராகு தன் உலோகமாகக் கொண்டுள்ளார். வெண்கலம் கேதுவுக்கு உரியதாக இருக்கிறது. ஆட்டின் மீது ராகு சவாரி செய்கிறார். சிங்க வாகனத்தில் கேது சஞ்சரிக்கிறார். கருமையே தனது அருமையான நிறம் என ராகு கூறுகிறார். சகல வர்ணங்களிலும் கேது தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறார்.

ராகுவின் தேவதையாக பத்ரகாளி விளங்குகிறாள். கேதுவின் அதிபதியாக இந்திரன் இருக்கிறார். ஆனாலும், பாவ புண்ணியங்களைக் குறித்துக் கொள்ளும் சித்ரகுப்தனே கேதுவிற்கு அதிதேவதையாகவும் விளங்குகிறான். வளைந்து நெளிந்து கொடிகள் போன்ற அமைப்பே ராகுவின் ஆசனம். தென் மேற்கு ராகுவிற்குரிய திசையாகும். அதற்கு எதிரான வடமேற்கை கேது தனது திசையாகக் கொண்டுள்ளார். உலகிலுள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத் தருபவர் ராகுதான். படிப்பில் அரைகுறையாக இருக்கும் சிலர், தங்கள் அனுபவ ஞானத்தால் மெத்தப் படித்தவர்களையும் தோற்கடிக்கச் செய்வர். இதற்குக் காரணமானவர் இவர்தான். சமய சந்தர்ப்ப, சூழ்நிலைகளைப் பார்த்துப் பக்குவமாகப் பேச வைப்பார். நெருக்கடியான நேரங்களில் தோள் தட்டி உற்சாகப் படுத்துவார். அசாத்திய தன்னம்பிக்கையை அநாயாசமாக அருள்வார். சட்டதிட்டங்களை அலட்சியப்படுத்த வைப்பவரும் இவர்தான். ‘தனக்கென்று ஒரு நியாயம்’ என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ள வைப்பவரும் ராகுதான். துறைமுகங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள். இருபத்தி நான்கு மணி நேர அங்காடிகள் எல்லாம் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட விஷயங்கள் என்பதையும் மறக்காதீர்கள்.

‘காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா’ என நீர்க்குமிழி வாழ்க்கையை நிமிடத்தில் உணர்த்துபவர்தான் கேது. பூர்வ ஜென்மம், நிகழ் ஜென்மம் என்று ஏழேழு ஜென்ம பாவங்களுக்கு பரிகாரம் தேடித் தருபவரும் இவர்தான். மகுடம் முதல் பிள்ளை வரை அனைத்தையும் இழந்தாலும், சுடலையில் நின்று உண்மை பேசிய அரிச்சந்திரனின் நாவினில் இருந்தது கேதுதான். வேதங்களையும், மந்திரங்களையும் அறியவைத்து தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வைப்பவரும் இவர்தான். இறைத் தூதர்களையும், சித்த புருஷர்களையும் உலகிற்கு அடையாளம் காட்டு வதில் இவரின் பங்குதான் அதிகம். கடும் விரதம் இருக்கும் பக்தர்களின் மனதை பக்குவத்தோடு வைத்திருக்கவும் செய்கிறார். ரத்தம் முதல் கண் தானம் வரை உறுப்பு தானம் செய்வோரின் உள்ளத்தில் உறைபவரும் கேதுதான் எனில் அது மிகையில்லை. சரி, இப்படிப்பட்ட தன்மையுள்ள ராகுவும், கேதுவும் எப்படி ஒருவருக்கு தோஷத்தைத் தருகிறார்கள்?

இன்னும் கொஞ்சம் யோசித்தால், ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்பதுதான் ராகு. ‘ஆசையே படாதே’ என்று அழுத்துவதுதான் கேது. இரண்டும் பாம்புதான். ஆனால் ஒன்றிற்கு எதிராகத்தான் இன்னொன்று நகரும். ‘ஒருவன் மனது ஒன்பதடா… அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா’ என்றொரு பாடல் உண்டு. அந்த ஒளிந்து கிடக்கும் எண்பதும்தான் ராகுவாகவும், கேதுவாகவும் வெளிப்படுகிறது. ஆசைப்படுவது என்பது மனதின் இயல்பு. அதில் சில சிக்கலான ஆசைகள் தோன்றுவதும்கூட மனதின் இயல்புதான். ஆனால், யோசித்த அல்லது பார்த்த விஷயங்களைத் தவறான முறையில் அனுபவிக்கத் தொடங்கும்போதுதான் உள்ளிருக்கும் ராகுவும், கேதுவும் தோஷமாக மாறுகிறது. தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால், ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாகத் தன்னை காட்டிக் கொள்கிறது. அப்போது அங்கு சர்ப்பம் தன் நஞ்சை உமிழத்தான் செய்யும். அதைத்தான் ஜோதிடர், ‘ஜாதகத்துல தோஷம் இருக்கு’ என்கிறார். அந்த நஞ்சை வீரியம் இழக்கச் செய்யும் பரிகாரங்களும் உண்டு.

The post திருமணத்தை தாமதிக்கும் சர்ப்ப தோஷம் appeared first on Dinakaran.

Related Stories: