இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவிப்பு பாஜ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜ விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு, பாஜ தேர்தல் போனஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தால் ரூ.5 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ம் பிரிவின்படி குற்றமாகும்.
அதன்படி, எந்தவொரு வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, யாருக்கும் பரிசுப் பொருளை அளித்தாலோ அல்லது அளிப்பதாக வாக்கு கொடுத்தாலோ அது லஞ்சமாக அமைகிறது. இதுபோன்ற குற்றத்தை அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் உள்ளது. இது வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு பாஜ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின்படி, பாஜவுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவிப்பு பாஜ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் appeared first on Dinakaran.

Related Stories: